Translate

Tuesday 10 July 2012

தமிழ் அரசியல் கைதிகள் விரைவில் விடுவிக்கப்படுவார்களா? Read more about தமிழ் அரசியல் கைதிகள் விரைவில் விடுவிக்கப்படுவார்களா? [5231] | இலங்கை செய்திகள் | செய்திகள் at www.inneram.com


கொழும்பு: அண்மையில் இலங்கைத் தமிழ் அரசியல் கைதியொருவர் வவுனியா சிறைச்சாலையில் இடம்பெற்ற தாக்குதலை அடுத்துப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் இலங்கையிலும் வெளிநாடுகளிலும் பல்வேறு அதிர்வலைகளை எழுப்பியுள்ளது.

இந்நிலையில், இலங்கைத் தமிழ் அரசியல் கைதிகளுக்கு எதிரான தாக்குதல் சம்பவங்கள் தொடர்வதைத் தடுக்குமுகமாக, இத் துர்ப்பாக்கிய சம்பவத்தின் பின்னராவது இலங்கை அரசாங்கம் எஞ்சியிருக்கும் அனைத்து அரசியல் கைதிகளையும் பொது மன்னிப்பின் கீழ் உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பில் மேற்படிக் கட்சியின் பொதுச் செயலாளர் சி.கா.செந்தில்வேல் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

"கடந்த மாதம் 29 ஆம் திகதி வவுனியாச் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகள் மீது படையினர் மோசமான தாக்குதலை மேற்கொண்டனர். படுகாயமடைந்த அவர்களை மகர சிறைச்சாலைக்கு மாற்றிய பின்பு அங்கு வைத்தும் அவர்கள் தாக்கப்பட்டனர். இத் தாக்குதல்களில் படுகாயங்களுக்கு உள்ளானவர்களில் ஒருவரான கணேசன் நிமலரூபன் என்ற இளைஞர் இம் மாதம் 4 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

தமிழ் அரசியல் கைதிகளின் மீதான இந்தக் கொடூரத் தாக்குதலும் படுகொலையும் மிலேச்சத்தனமானதும் பேரினவாதப் பாசிசத்தனம் கொண்டதுமாகும். அது மட்டுமன்றி, இறந்த இளைஞனின் வெற்றுடலைக் கூட பெற்றோரிடம் ஒப்படைக்க மறுத்துவரும் அக்கிரமத்தை மகிந்த சிந்தனை ஆட்சி செய்து நிற்கிறது .இதனை எமது கட்சி மிக வன்மையாகக் கண்டிக்கிறது. நீண்டகாலமாக விசாரணை இன்றி அரசியல் கைதிகளைத் தடுத்து வைத்திருந்து வருவதன் விளைவே, கண்டனத்திற்கும் துயரத்திற்குமுரிய இந்தச் சம்பவமாகும்.

தமிழ் அரசியல் கைதிகள் ஐந்து, பத்து, பதினைந்து வருடங்களுக்கு மேலாக விசாரணை இன்றித் தடுத்து வைக்கப்பட்டு வந்துள்ளனர். அவர்களை விடுதலை செய்யும்படி கோரிப் பல்வேறு அழுத்தப் போராட்டங்கள் சிறைச்சாலைகளுக்கு உள்ளேயும் வெளியேயும் நடத்தப்பட்டு வந்துள்ளன. ஆனால், பௌத்த தர்மம் பேசும் ஆட்சியாளர் அவர்களுக்கான விடுதலைக் கோரிக்கைகளைச் செவிகளில் வாங்கவே இல்லை. அதற்குப் பதிலாக சிறைச்சாலைகளில் தமிழ்  அரசியல் கைதிகள் மீது பேரினவாத ஒடுக்குமுறை மமதையும் தாக்குதல்களும் மேற்கொள்ளப்படுகின்றன. இத் தாக்குதல் முன்னைய சிறைச்சாலைத் தாக்குதல்களையும் படுகொலைகளையும் நினைவுபடுத்துகின்றன.
1983 இல் வெலிக்கடைச் சிறைச்சாலைப் படுகொலைகள், 2000 ஆம் ஆண்டில் பிந்துனுவெவ புனர்வாழ்வு முகாம் படுகொலைகள், களுத்தறைச் சிறைச்சாலைத் தாக்குதல்கள், பூஸா தடுப்புமுகாம் சித்திரவதைகள் போன்றவற்றின் தொடர்ச்சியாகவே தற்போதைய வவுனியாச் சிறைச்சாலைத் தாக்குதலையும் படுகொலையையும் காண முடிகிறது.
புத்தரின் போதனைகள் பற்றியும் பௌத்த தர்மம் பற்றியும் நாளாந்தம் பரப்புரை செய்து வரும் இன்றைய ஆட்சியில், இவ்வாறான மிலேச்சத்தனமான தாக்குதலும் மிருகத்தனமான படுகொலைகளும் இடம்பெற்றிருப்பது ஆட்சித் தலைவர்களை வெட்கித் தலைகுனிய வைத்துள்ளது.
இக்கொடூரச் சம்பவத்திற்குப் பின்பாவது அனைத்து அரசியல் கைதிகளையும் பொதுமன்னிப்பின் கீழ் விடுவிக்க அரசாங்கம் முன்வரவேண்டும்  என்பதை நம்முடைய கட்சி அனைத்துத் தமிழ்மக்கள் சார்பாகவும் வற்புறுத்திக் கேட்டுக் கொள்கின்றது" என்று மேற்படி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment