தேர்தலுக்கான தொனிப்பொருளொன்று தமக்கு இல்லாததால், சமயத்தை ஏலமிட்டு, இந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்ட புத்தரின் புனித எலும்பை வைத்து அரசு தேர்தல் பிரசாரத்தில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றது என ஐக்கிய தேசியக் கட்சி நேற்று குற்றஞ் சாட்டியது.
அத்துடன், நாட்டின் பொலிஸ், இராணுவத்தினருக்கு இணையாகச் சேவையாற்றி வருகின்ற 40 ஆயிரம் சிவில் பாதுகாப்புப் படையினருக்கு நிரந்தர நியமனம் வழங்காமல், தமது தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக அரசு அவர்களைப் பயன்படுத்தி வருகின்றது என ஐ.தே.க. பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவரின் உத்தியோக பூர்வ இல்லத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியவை வருமாறு
கடந்த காலங்களில் அரசு, மக்களிடம் பல வாக்குறுதிகளை வழங்கியிருந்தது. அத்துடன், கடந்த தேர்தல்களில் யுத்த வெற்றியைத் தொனிப்பொருளாகக் கொண்டு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டது.
ஆனால் இம்முறை அரசின் தேர்தல் பிரசாரத்திற்குத் தொனிப்பொருள் ஒன்று இல்லாததால், இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட புத்தரின் புனித எலும்பை வைத்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுகின்றது.
மாகாணசபைத் தேர்தல்கள் இடம்பெறுகின்ற பகுதிகளில் மட்டும்தான் புத்தரின் புனித எலும்பு மக்களின் பார்வைக்காக வைக்கப்படுகிறது. தற்போது அரசின் தேர்தல் பிரசாரங்கள் இடம்பெறுகின்ற அநுராதபுரம், சேருவில ஆகிய பகுதிகளில் புத்தரின் புனித எலும்பு காட்சிப்படுத்தப்படவுள்ளது.
சமயத்தை ஏலமிட்டு தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் அரசு ஈடுபடுகின்றது. பௌத்த சமய விவகார அமைச்சரின் பிறப்பிடமான அம்பாறையில் கூட தேர்தல் முடிவடைந்த பின்னரே புத்தரின் புனித எலும்பு காட்சிப்படுத்தப்படவுள்ளது.
நாட்டின் பொலிஸ், இராணுவத்தினருக்கு இணையாக சேவையாற்றிவரும் 40 ஆயிரம் சிவில் பாதுகாப்புப் படையினருக்கு இணையாகச் சேவையாற்றி வருகின்ற சிவில் பாதுகாப்புப் படையினருக்கு நிரந்தர நியமனம் வழங்காதுள்ளது. 2005ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் இவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படும் என அரசு கூறியது. ஆனால், அதை செய்து முடிப்பதற்கு அரசு இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
சிவில் பாதுகாப்புப் படையிலிருந்தவர்கள் அந்தந்த திணைக்கள அதிகாரிகளுக்கு சேவை செய்வதற்கும், சீமெந்து கல் வெட்டுவதற்கும், வடிகான் சுத்தம் செய்வதற்கும், மரக்கறித் தோட்டம் செய்வதற்கும் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
திருகோணமலையில் ஆளுங்கட்சி யினரின் தேர்தல் பிரசார நடவடிக்கை களிலும் இவர்கள் ஈடுபடுத்தப் படுகின்றனர். வீட்டுக்கு வீடு சென்று துண்டுப் பிரசுரங்களை விநியோகிப்பதற்கு இவர்கள் பயன்படுத்தப் படுகின்றனர்.
5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் இரண்டாம் பகுதிக்கான வினாத்தாள் பரீட்சை நடைபெறுவதற்கு முன்னதாகவே வெளியிடப்பட்டுள்ளது. முதலில் ஜி.சீ.ஈ. உயர்தர மாணவர்களின் பரீட்சைப் பெறுபேறுகளின் "இஸட்' புள்ளி விவகாரத்தில் குளறுபடிகள் ஏற்பட்டன. இப்போது 5ஆம் ஆண்டு மாணவர்களின் புலமைப் பரிசில் பரீட்சைகளில் மோசடிகள் இடம்பெற்றுள்ளன.
5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையின் பாகம் இரண்டுக்கான வினாத்தாள் முன்கூட்டியே வெளியிடப் பட்டிருந்தால் அதற்கான முழுப் பொறுப்பையும் கல்வி அமைச்சும், பரீட்சைகள் திணைக்களமுமே ஏற்க வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment