Translate

Wednesday, 29 August 2012

பல்வேறு குற்றச்சாட்டுக்களுக்கு மத்தியில் இனிதே நிறைவேறிய டெசோ


அனலை நிதிஸ் ச. குமாரன்
தி.மு.க. நடத்திய டெசோ மாநாட்டின் நோக்கம் ஈழத் தமிழர்களைப் பாதுகாப்பதற்கு அல்ல எனவும், கலைஞர் தனது கட்சியின் எதிர்காலத்தை நிர்மாணிக்கத் தேவைப்பட்ட ஆயுதமே டெசோ என்கிற மாநாடு எனவும் போன்ற குற்றச்சாட்டுக்கள் பரவலாகப் பல தமிழக அரசியல்வாதிகளினால் முன்வைக்கப்பட்டுள்ளன. ஈழப் போர் உக்கிரம் அடைந்து பல்லாயிரம் மக்கள் கொலை செய்யப்பட்ட காலப்பகுதியில் தமிழகத்தை ஆட்சி செய்தது கலைஞர் தலைமையிலான தி.மு.க. அரசு. அனைத்தும் முடிந்த பின்னர் இப்படிப்பட்ட மாநாடுகள் எந்த வகையில் ஈழத் தமிழரைக் காவந்து பண்ணும் என்பதனைக் கலைஞர் இன்றுவரை விளக்கவில்லை.

ஈழத் தமிழர் விடயத்தில் மத்திய அரசின் உதவியின்றித் தமிழகத்தினால் எதுவும் செய்ய முடியவில்லை என்று தற்போது கூறுகிறார் கலைஞர். தமது கட்சி நினைத்தால் குறைந்தது இரண்டு இலட்சம் மக்களைத் திரட்ட முடியும் என்று இன்றும் மார் தட்டுபவர்கள் நாற்பது ஆயிரம் மக்கள் சாகும்போது என்ன செய்துகொண்டிருந்தார்கள் என்கிற கேள்வி எழுகிறது. மக்களை ஏமாற்ற வெறும் மனிதச் சங்கிலிப் போராட்டம் போன்ற நகைச்சுவையான போராட்டங்களைச் செய்த கலைஞரின் கட்சி மத்திய அரசின் முக்கிய கூட்டணிக் கட்சிகளில் ஓன்று என்பதனை மறந்துவிட்டுப் பேசுகிறது போலும்.

தி.மு.கவின் ஆதரவு இல்லாவிட்டால் இந்தியாவின் மத்திய அரசு அன்றே பதவியிறக்கப்பட்டிருக்கும். ஸ்திரத்தன்மை இல்லாத மத்திய அரசினால் நிச்சயமாக விடுதலைப்புலிகளை வென்றிருக்க முடியாது. மத்தியிலிருக்கும் காங்கிரஸ் கட்சிக்கு முழு ஆதரவை வழங்கிக் கெர்ண்டு வெறும் கண்துடைப்பு நாடகமாடும் கலைஞர் போன்ற அரசியல்வாதிகள் தமிழ் மக்கள் மத்தியில் அரசியல் செய்வது வெறும் கேலிக்கூத்தானது.
தமிழீழம் என்கிற வார்த்தையையே உச்சரிக்காத கலைஞர்
தமிழீழமே தனது இறுதி இலட்சியம் என்று கூறிய கலைஞர் மத்திய அமைச்சர் சிதம்பரத்தைச் சந்தித்த பின்னர் தமிழீழம் என்கிற சொல்லையே கூறவில்லை. அனைத்தும் முடிந்த பின்னர் பத்திரிகைகளுக்குப் பேட்டியளிக்கையில் தமிழீழம் அடையும் வரை தனது கட்சி போராடும் என்று போர்முரசு செய்த கலைஞர்இ தான் வெறும் வாய்ப்பேச்சில் வல்லவர் என்பதனை நிரூபித்துள்ளார்.

தமிழீழம் குறித்து சிறிலங்காவில் வதியும் தமிழரிடையே வாக்கெடுப்பு நடத்தவேண்டும் என்று மாநாடு வாயிலாகப் பிரகடனப்படுத்துவோம் என முதலில் அறிவித்து, பின்னர் சிதம்பரம் சந்தித்துச் சென்றதையடுத்துஇ தமிழீழம் என்கிற தனியரசு கோரப்போவதில்லை, ஈழத்தமிழர் மறுவாழ்வு பற்றியே மாநாடு விவாதிக்கும் என்று கலைஞர் தெரிவித்தார். இப்பின்னணியில் மக்கள் நிரம்பி வழிந்த ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ அரங்கில் நடைபெற்ற டெசோ மாநாட்டினை முடித்துவைத்துப் பேசுகையில் கருணாநிதி, ஈழம் இன்னமும் தனது கனவுதான் எனவும் அதை நிறைவேற்றஇ தொடர்ந்து போராட இருப்பதாகவும் கூறினார். மாநாட்டிற்கு வந்திருந்த தி.மு.கவினரும் தமிழீழம் மலரும் என நம்பிக்கை தெரிவித்தனர்.

மக்களின் நாடித் துடிப்பை நன்கறிந்து செயற்படும் கலைஞர் போன்ற நரித்தந்திர அரசியல்வாதிகளின் காரணத்தினாலேயே தமிழ் மக்கள் இன்றும் அகதிகளாக உலகம் பூராகவும் அலைந்து திரிகிறார்கள். பிறருக்கு உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை உபத்திரவமாவது செய்யாமல் இருப்பது சிறந்தது. பாவப்பட்ட தமிழ்ச் சாதியைச் சாட்டாக வைத்துப் பிழைப்பு நடத்தும் கலைஞர் போன்றவர்களை நிச்சயம் தமிழ்ச் சமூகம் மன்னிக்காது.இனியாவது திருந்தி தமிழ் மக்களின் விடிவுக்கு எதையேனும் உருப்படியாகச் செய்வாராகில் அது கலைஞர் தனது இறுதிக் காலத்திலாவது செய்யக்கூடிய புண்ணியமாக இருக்க முடியும்.

மாநாட்டில் கலந்துகொண்ட தலைவர்களும் மனித உரிமை ஆர்வலர்களும்இ இழந்த உரிமைகளை ஈழத் தமிழர் மீண்டும் பெற இந்த மாநாடு உதவும் என நம்பிக்கை தெரிவித்தனர். சிறிலங்காவிலிருந்து சென்று மாநாட்டில் பங்குபற்றிய நவ சம சமாஜ கட்சியின் பொதுச் செயலாளர் விக்ரமபாகு கருணாரட்ண, “ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக இப்படிப் பெருமளவில் மக்கள் திரளும்போது அதை அலட்சியப்படுத்த இந்திய அரசால் முடியாது,தமிழர் வாழ்வு சிறக்க மகிந்தா அரசின் மீது அழுத்தம் கொடுக்க வேண்டிய நிலை உருவாகும்"என்றார்.

சிறிலங்கா திரும்பிய பின்னர் கருணாரட்ண செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், இந்திய மத்திய அரசின் ஆதரவுடனேயே டெசோ மாநாடு நடைபெற்றது எனக் கூறியுள்ளார். இதன் மூலமாக கலைஞரின் உண்மையான முகம் உரித்துக் காட்டப்பட்டுள்ளது. மத்திய அரசின் ஆதரவின்றி, தமிழக அரசின் சட்டத் தடைகளையும் மீறி சட்ட ரீதியாக வெற்றிகொண்டே டெசோ மாநாட்டை நடத்தியதாக மார் தட்டும் தி.மு.கவினருக்கு கருணாரட்ணவின் கூற்று சற்று அதிர்ச்சியாகவே அமைந்திருக்கும் என்றால் மிகையாகாது.

டெசோவின் தீர்மானங்கள்
டெசோ மாநாட்டிலும் அதன் முன்னர் இடம்பெற்ற கலந்துரையாடலிலும் கலந்து கொள்ள பல்வேறு நாடுகளில் இருந்து அறிஞர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். சுவீடன் நாடாளுமன்ற உறுப்பினர் நஸீம்மாலிக்,நைஜீரியா நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல் ரசாக்மோமோ, மொராக்கோ தேசிய உண்மை நீதி ஆணையத் தலைவர் அஃபெகோமுபாரக், இங்கிலாந்திலிருந்து சென்ற குகநாதன், சிவானந்த ஜோதி உட்படப் பலர் பங்கேற்றுத் தங்கள் கருத்துகளை எடுத்துரைத்தனர்.

தி.மு.க. பொதுச்செயலாளர் க.அன்பழகன்;, பொருளாளர் மு.க.ஸ்டாலின், லோக்ஜனசக்தி கட்சித் தலைவர ;ராம் விலாஸ் பாஸ்வான்,திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன்,திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் தலைவர் சுப.வீரபாண்டியன், டெசோ உறுப்பினர் சுப்புலட்சுமி ஜெகதீசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சமாஜவாதி கட்சித் தலைவர் ராம்கோபால் யாதவ், மத்திய அமைச்சர்கள் மு.க.அழகிரி, காந்திசெல்வன், ஜெகத்ரட்சகன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி, திருச்சி சிவா, திமுக துணைப் பொதுச் செயலாளர் துரைமுருகன், டெசோ வரவேற்புக் குழு உறுப்பினர்கள் பொன்முடி, கே.எஸ்.ராதாகிருஷ்ணன்,ஹசன்முகமது ஜின்னாஆகியோர் பங்கேற்றனர்.

ஈழத்திலிருந்து அகதிகளாகத் தமிழகம் வந்த அனைத்து அகதிகளுக்கும் இந்தியக் குடியுரிமை வழங்க மத்திய அரசை வலியுறுத்தியும்,ஈழத் தமிழர்களிடம் ஐ.நா. மூலமாக பொது வாக்கெடுப்பு நடத்த வலியுறுத்தியும் டெசோ மாநாட்டில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின் வருமாறு:
(1) ஐ.நாவின் மனித உரிமைக் குழுவின் சார்பில் சர்வதேசக் குழு ஒன்று அமைக்கப்பட்டு, சிறிலங்காவில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் கண்டறியப்பட்டு, போர்க் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்;
(2) ஈழப்பகுதிகளில் சிங்கள மக்களைக் குடியமர்த்தும் முயற்சியை சிறிலங்காவின் அரசு செய்து வருகிறது. சிறிலங்கா அரசின் இத்தகைய கொடுஞ் செயல்களை உலக நாடுகளின் பிரதிநிதியாக விளங்கும் ஐ.நா சபை உடனடியாகத் தடுத்து நிறுத்திட வேண்டும்;
(3) சிறிங்காவிலுள்ள தமிழ் மக்கள் தாங்கள் விரும்பும் அரசியல் தீர்வைத் தாங்களே முடிவு செய்து கொள்ளும் வகையில் அவர்களுக்கு முழு உரிமை வழங்குவதற்கு இந்திய அரசு ஐ.நாவில் தீர்மானம் கொண்டுவர வேண்டும்;
(4) தமிழீழப் பகுதிகளிலிருந்து உடனடியாக இராணுவத்தைச் சிங்கள அரசு விலக்கி கொள்வதற்கு ஐ.நா. சபையும், உலக நாடுகளும் சிறிலங்கா அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்;
(5) இராணுவத்தைத் திரும்பப் பெறுவதை நேரடியாகக் கண்காணிப்பதற்கு, ஐ.நாவில் அங்கம் வகுக்கும் நாடுகள் அவை ஒரு பன்னாட்டு குழுவை ஏற்படுத்த வேண்டும்;
(6) சிறிலங்காவிலிருந்து வெளியேறி, பல்வேறு நாடுகளில் அகதிகளாக அல்லலுறும் தமிழர்கள் மற்றும் உரிய ஆவணங்கள் இல்லாமல் சொந்த நாட்டை விட்டு வெளியேறியதால் பிற நாடுகளில் கைதிகளாக சிறையில் வாடும் ஈழத் தமிழர்களை உடனடியாக, ஐ.நா. சபையின் அகதிகளுக்கான ஆணையரிடம் ஒப்படைப்பதற்குரிய நடவடிக்கைகளை ஐ.நா.சபை மேற்கொள்ள வேண்டும்;
(7) ஈழத்திலிருந்து வெளியேறி இந்தியாவில் அகதிகளாக வாழும் தமிழர்கள் நிம்மதியாக வாழ்வதற்கு ஏதுவாக, மத்திய அரசு அனைத்து ஈழத் தமிழ் அகதிகளுக்கும் இந்தியக் குடியுரிமை அல்லது நிரந்தரமாக இந்தியாவில் வாழ்பவர் என்ற நிலை வழங்க வேண்டும் என்று இந்த மாநாடு இந்திய அரசை வலியுறுத்துவதுடன்,அகதிகள் தொடர்பான ஐ.நாவின் ஒப்பந்த ஆணை இந்தியாவில் பின்பற்றப்பட வேண்டும்;
(8) சிறிலங்காத் தமிழர்களிடம் ஐ.நா. சபை மூலம் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். அது தெற்காசிய மனித உரிமைகள் பிரச்சினையாக முன்னிலைப்படுத்தப்பட வேண்டும்;
(9) ஆயிரக்கணக்கான தமிழர்கள் சிறை பிடிக்கப்பட்டு சிறிலங்காவின் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட வேண்டும்;
(10) இந்திய அரசு, ஈழத்தமிழர் மறுவாழ்வு நிதியாக வழங்கியுள்ள ரூ.500 கோடியை உரிய முறையில் பயன்படுத்த வேண்டும்;
(11) நிராயுதபாணிகளாக இருக்கும் அப்பாவித் தமிழக மீனவர்கள் ஈவு இரக்கமின்றி சிறிலங்காவின் கடற்படையால் தாக்கப்படுகின்றனர்;கைது செய்யப்படுகின்றனர்; சுட்டுக் கொல்லப்படுகின்றனர்; அவர்களது மீன்பிடி படகுகள் மூழ்கடிக்கப்படுகின்றன அவர்கள் பிடித்த மீன்கள் கைப்பற்றப்படுகின்றன. தமிழ் மீனவர்கள் சிறிலங்காக் கடற்படையினரால் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்படுகின்றனர். இந்த கொடுமைக்கொரு முடிவுகட்ட, கச்சத்தீவை இந்தியா மீண்டும் தனது ஆளுகையின் கீழ்கொண்டு வருவதோடு தனுஷ்கோடி அல்லது மண்டபம் முகாமில் இந்திய கடற்படை தளம் ஒன்றை இந்திய அரசு நிறுவ வேண்டும்;
(12) ஈழத் தமிழர்களை பாதிக்கக்கூடிய அளவிற்கு சிறிலங்காவின் இராணுவத்திற்கு இந்தியாவில் எந்த மாநிலத்திலும் பயிற்சி கொடுப்பதை இந்த மாநாடு ஏற்க இயலாது என்பதோடு, இனி அப்படிப்பட்ட பயிற்சிகள் அளிப்பதை அறவே தவிர்க்க வேண்டும்;
(13) ஈழத்தமிழர்களின் வாழ்வுரிமை பாதுகாப்புக்காக தாய்த் தமிழகத்தில் நடைபெறும் இந்த மாநாட்டினை சட்டவிரோதமானது என்றும்,இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக, சிறிலங்காவிலிருந்து செல்பவர்கள் மீது கவனம் செலுத்தப்படும் என்றும் சிறிலங்கா அரசின் சார்பில் மிரட்டலாக அறிவித்துள்ளனர். சிறிலங்கா அரசின் இந்த ஜனநாயக எதிர்ப்புத் தன்மையை இம்மாநாடு வன்மையாக கண்டிக்கிறது.

தீர்மானங்கள் நிறைவேற்றப்படுவது பின்னர் சாக்கடையில் போடுவது தமிழர்கள் நன்கறிந்த விடயமே. வாக்குறுதிகளை அரசியல்வாதிகள் அழிப்பது அல்லது கிழித்தெறிவதென்பது சிறிலங்காவில் மட்டுமல்ல, இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளில் அதீதமாகவே இடம்பெறும் செயல். தீர்மானங்களுக்குச் செயல்வடிவம் கொடுப்பதிலேயே தி.மு.காவின் டெசோ மாநாட்டின் வெற்றி தோல்வி தங்கியுள்ளது. இத் தீர்மானங்களினால் ஈழத் தமிழர்களின் எதிர்காலம் எவ்வகையில் உதவும் என்பதனை அடுத்த வாரம் அலசுவதுடன், அரசியல்வாதிகளின் பேச்சு காற்றுடன் கலந்துவிடாமல் இருக்க மக்கள் விழிப்பாக இருக்க வேண்டுமென்பதே இத்தருணத்தில் முன்வைக்கப்படும் வாதம்.
இவ்ஆய்வு பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன

No comments:

Post a Comment