இலங்கை அதிபர் ராஜபக்சேவின் இந்திய சுற்றுப் பயணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து விடுதலை சிறுத்தையினர் போராட்டம் நடத்தினார்கள். நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் ரோட்டில் உள்ள இலங்கை தூதரக அலுவலகத்தை முற்றுகையிடுவதற்காக விடுதலை சிறுத்தை தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் 200 தொண்டர்கள் திரண்டு வந்தனர். அவர்கள் அனைவரும் நுங்கம்பாக்கம் லயோலா சுரங்க பாதை அருகில் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
முற்றுகை போராட்டம் காரணமாக காலையில் இருந்தே இலங்கை தூதரகத்தை சுற்றியுள்ள சாலைகளில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் பொது மக்கள் கடும் சிரமத்துக்குள்ளானார்கள். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த சுந்தர் என்ற வாலிபர் விடுதலை சிறுத்தை கட்சி தொண்டர்களால் தாக்கப்பட்டார். போராட்டத்தால் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள இடையூறு குறித்து தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்ததால் விடுதலை சிறுத்தை கட்சியினர் அவரை சூழ்ந்து கொண்டு சரமாரியாக அடித்தனர்.
பின்னர் போலீசார் அந்த வாலிபரை மீட்டு அங்கிருந்து பத்திரமாக அனுப்பி வைத்தனர். போராட்டத்தின்போது எடுக்கப்பட்ட போட்டோக்கள் மற்றும் வீடியோ காட்சியை வைத்து வாலிபரை தாக்கியவர்களை போலீசார் கைது செய்து வருகிறார்கள். நேற்று முன்தினம் இரவு திருமாவளவனின் தனிச்செயலாளர் இளஞ்சேகுவேரா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். வாலிபர் சுந்தர் தாக்கப்பட்டபோது 4 பேர் சூழ்ந்து நின்றனர்.
அவர்களின் போட்டோக்களை தனித்தனியாக பிரதி எடுத்துள்ள போலீசார் அதை வைத்து அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இளங்சேகுவேராவை தவிர மற்றவர்கள் யார் என்று அடையாளம் தெரியவில்லை. எனவே கட்சி நிர்வாகிகளிடம் அந்த போட்டோக்களை காட்டி அவர்களை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
No comments:
Post a Comment