Translate

Thursday, 13 September 2012

ஐநா சபைக்குள் என்னை அரை மணி நேரம் பேச விடுங்கள்! தமிழீழம் அடைந்து விடுவேன் என்கிறார் சீமான்!




தமிழக அரசியலில் இனரீதியிலான தாக்குதல் கலாசாரத்தைத் தொடக்கி வைத்திருக்கிறார் சீமான். விளையாட்டுப் பயிற்சி, சுற்றுலா என்று தமிழகம் வந்த சிங்களர்கள் மீது அவருடைய 'நாம் தமிழர்’ இயக்கத்தினர் முன்னின்று நடத்திய தாக்குதல்கள், இலங்கை அரசு தன்னுடைய பிரஜைகளை தமிழ்நாட்டுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தும் அளவுக்குச் சென்றது.

தேசிய ஊடகங்கள் தமிழ் அமைப்புகளை வெறி பிடித்தவையாகச் சித்திரிக்கின்றன. ஆனால், சீமானோ கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாமல் பேசுகிறார்.


தமிழகம் வரும் சிங்களவர்கள் மீது தாக்குதல் நடத்துவதன் மூலம் நீங்கள் சொல்ல விரும்பும் செய்தி என்ன?

முதலில் நாங்கள் தாக்குதல் நடத்துகிறோம் என்று சொல்வதே தவறு. என்ன தாக்குகிறோம்? ஒருவரைக் கையை ஒடித்திருக்கிறோமா, காயப்படுத்தி இருக்கிறோமா? இங்கே எவ்வளவு சிங்களவர்கள் படிக்கிறார்கள், என்னென்ன வேலைகளில் இருக்கிறார்கள் என்றெல்லாம் தெரியாதா?

நாங்கள் வன்முறைகளில் ஈடுபட வேண்டும் என்றெல்லாம் நினைத்திருந்தால், ஒரு சிங்களவன் இங்கே நுழைய முடியாது. ஆனால், பத்திரமாகத்தானே இருக்கிறார்கள்? அங்கிருந்து வந்தவர்களைத் திருப்பி அனுப்பியதற்காக இவ்வளவு கோபப்படும் நீங்கள், 584 தமிழக மீனவர்கள் செத்திருப்பதைப் பற்றி வருத்தப்படவில்லையே?

இப்போதுகூட நாகப்பட்டினம் மீனவர்களை சிங்களர்கள் அடித்துத் துரத்தி இருக்கிறார்கள். இதை எல்லாம் பார்த்துக்கொண்டே இருக்கச் சொல்கிறீர்களா?

எங்கள் இனம் மொத்தமும் கொத்துக் கொத்தாகக் கொன்று குவிக்கப்பட்டபோதும்கூட, அடக்க முடியாத ஆத்திரமும் கோபமும்கொண்டு வெறிகொண்ட மிருகங்களைப் போல உலவியபோதும்கூட, ஒரு சிங்களவன் மீதுகூட நகக்கீறலை ஏற்படுத்தாத ஜனநாயகப் பிள்ளைகள் நாங்கள்.

உள்ளுக்குள் எரிந்துகொண்டு இருந்த நெருப்பைக்கூட எங்கள் மீது கொட்டிக்கொண்டு வெந்து செத்தோமே தவிர, ஒரு சிங்களவனையும் தொடவில்லை.

ஆனால், எல்லாவற்றுக்குமே ஓர் எல்லை உண்டு. இப்போதும்கூட அடிக்கவில்லை, தாக்கவில்லை. ஆனால், செய்ய முடியும். இனியும் எங்கள் மீனவர்களைத் தொடாதே என்று எச்சரிக்கிறோம். இந்த நிலைமை தொடர்ந்தால், இப்படியே அற வழியில் நாங்கள் போராடிக்கொண்டு இருக்க மாட்டோம் என்று சொல்கிறோம்.

எப்போதாவது இங்கு வரும் சிங்களவர்களைத் தாக்குகிறீர்களே... அந்தக் கோபம் எப்போதுமே அங்கு இருக்கும் தமிழர்கள் மீது எதிரொலிக்காதா?

சரி, இவ்வளவு நாளும் தமிழர்களைக் கொன்று குவித்தார்களே... யார் இங்கே அடித்தார்கள் என்று அங்கு கொன்று குவித்தார்கள்? நாங்கள் ஒன்றுமே செய்யாமல் இருந்தால் மட்டும் எங்கள் மக்களுக்கு எல்லா உரிமைகளையும் கொடுத்து வாழவைத்து விடுவார்களா என்ன? நாம் உயிரை இழக்கலாம், உரிமையை இழக்கக் கூடாது!

சரி... நீங்கள் பிரதமராகவோ, தமிழ்நாட்டின் முதல்வராகவோ இருந்தால், இலங்கையுடனான உறவை எப்படி அணுகுவீர்கள்?

பிரதமராவது என் கனவல்ல. ஒரே கனவு... 12 கோடி மக்கள், இரண்டு பெரும் தாய்நிலங்களைக்கொண்ட ஓர் இனத்தைச் சேர்ந்த மக்கள், தங்களுக்கு என்று ஒரு நாடு அடைந்து, சுதந்திரமாக வாழ வேண்டும். இலங்கை இரு நாடுகளாக வேண்டும். அதுதான் கனவு.

அடிப்படையில் உங்கள் இயக்கத்தின் இலக்குதான் என்ன?'

இலக்கு ஒன்றுதான். இனத்தின் விடுதலை!

ஈழத் தமிழர்களுக்குத் தனி நாடு காணும் உங்கள் கனவு, இந்தியத் தமிழர்களுக்கும் நீளுமா?

இல்லை. ஆனால், இந்தியாவை ஆளும் தேசியக் கட்சிகள் இந்த நிலத்தில் இருந்து நாங்கள் பிரிந்துபோவதற்கான காரணங்களை அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன என்று மட்டும் சொல்வேன். தவித்த வாய்க்குத் தண்ணீர் தராத ஒரு தேசத்தின் மீது எப்படி வரும் எனக்கு நேசம்?

தமிழீழத்தை அடைய என்ன திட்டம் உங்களிடம் இருக்கிறது?

அரசியல் புரட்சி. 12 கோடித் தமிழரில் ஒரு 50,000 பேரை ஒன்று திரட்டிவிட்டால்கூட மிகப் பெரிய புரட்சி. அட, ஐ.நா. சபைக்குள் என்னை அரை மணி நேரம் பேசவிடுங்கள். நான் நாடு அடைந்துவிடுவேன்!

பிரபாகரனுக்குப் பிந்தைய காலகட்டத்தில் உருவாகி இருக்கும் வெற்றிடத்தைப் பயன்படுத்திக்கொள்ளும் போட்டியின் வெளிப்பாடுதான் உங்களுடைய அரசியல் என்று சொன்னால், ஏற்பீர்களா?

இல்லை. ஒரு நீண்ட போராட்டத்தின் தொடர்ச்சி இது. ஆயுதம் ஏந்திய புரட்சி மௌனித்த பிறகு, அரசியல் புரட்சியாக அது வெடிக்கிறது. பல தளங்களில் வெடிக்கிறது. நீங்கள் பொறுத்திருந்து பாருங்கள்... ஒரு காலகட்டத்தில் மிகக் கூர்மையான, வலிமையான புரட்சியாக அது வெடிக்கும். இன்னும் 10 ஆண்டுகள் கழித்துப் பாருங்கள்... நிச்சயமாக தேசியக் கட்சிகளோ, திராவிடக் கட்சிகளோ இந்த நிலத்தில் இருக்கப்போவது இல்லை!

ஈழத் தமிழர் நலனுக்காக வைகோ, திருமாவளவன் போன்றோருடன் இணைந்து செயல்படுவதில் உங்களுக்கு என்ன தயக்கம்?

முடியாது. இந்திய தேசிய, திராவிட, சாதியக் கட்சிகளுக்கு மாற்றாகத்தான் நாங்கள் நிற்கிறோம். இனியும் தமிழ்ப் பிள்ளைகளான நாங்கள், இவர்கள் பின்னால் செல்ல முடியாது.

கருணாநிதியைப் பிடி பிடி என்று பிடிக்கும் நீங்கள், ஜெயலலிதாவை விமர்சிக்கத் தயங்குவது ஏன்? சிறை பயமா?

சிறை, வழக்குகளுக்கு எல்லாம் பயப்படுபவன் அல்ல நான். ஆனால், ஜெயலலிதாவை நான் ஏன் திட்ட வேண்டும்? அவருக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? எனக்கு ஜெயலலிதா யார்? கருணாநிதியின் பிழையே எம்.ஜி.ஆர்., கருணாநிதியின் பிழையே ஜெயலலிதா. என் இனமே அழியக் காரணம் யார்? காரணகர்த்தாவைத்தானே நான் திட்ட வேண்டும்?

No comments:

Post a Comment