Translate

Wednesday, 12 September 2012

கிழக்கு மாகாண சபை தேர்தல் முடிவுகள் அரசின் போக்கில் மாற்றத்தை ஏற்படுத்துமா?

essay* கிழக்கில் தேர்தல் வன் செயல்கள் எதிர்க்கட்சிகள் முறைப்பாடு. ஜெனிவா மாநாட்டுக்கு அமைச்சர் சமரசிங்க செல்வார்
* 12 ஆம் திகதி றொபேர்ட் பிளேக் வருகிறார்
* யாத்ரீகர்கள் தாக்கப்பட்ட சம்பவம் புறக்கோட்டையில் ஆர்ப்பாட்டம்.
 இலங்கை அரசின் செல்வாக்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் நடந்து முடிந்த மூன்று மாகாணங்களுக்குமான மாகாண சபைகளின் தேர்தல் முடிவுகளை வைத்தே இப்பொழுது கணிக்கப்படவிருக்கின்றது. 

 
பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக அரசு பலராலும் பலவிதமாக விமர்சிக்கப்பட்டு வந்த போதிலும் இன்னமும் மக்களின் ஆதரவை இழந்துவிடவில்லை என்பதை உலகுக்கும் உள்நாட்டுக்கும் எடுத்துக் காட்ட வேண்டிய இக்கட்டில் அரசு இருந்துவருகின்றது. அதனால் முழு அமைச்சரவையுமே தேர்தல் பிரசாரத்தில் களமிறக்கப்பட்டிருந்தது.
 
சப்ரகமுவ மற்றும் வட மத்திய மாகாணங்களில் அரசு வெற்றி வாகை சூடும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் கிழக்கு மாகாணத்தில் தொங்கு மாகாண சபையொன்று ஏற்படக் கூடிய சாத்தியமே காணப்படுகின்றது. வடக்கு மாகாணத்தைப் போலில்லாமல் கிழக்கில் வாக்காளர் எண்ணிக்கை பெரும்பாலும் சம நிலையிலேயே சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள் என்று பிரிபடக் கூடிய நிலை காணப்படுகின்றது. 
 
அரசு திருப்தியளிக்கும் வகையில் கிழக்கில் வாக்குப்பலம் காணப்படுமானால் அரசின் கொள்கைகளுக்கு அங்கீகாரம் கிடைத்துவிட்டதாகக் கூறிக் கொள்ளலாம். வேறு விதமாக இருப்பின் அது தொடர்பான கருத்தும் எதிர்மாறான செய்தியையே வழங்குவதாய் இருக்கும்.
 
தொங்கு மாகாண சபை உருவாகும் நிலையேற்படுமானால் பெருமளவில் அரசியல் பேரம் பேசும் செயற்பாடுகள் மும்முரமடையும். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஒரு பங்காளி கட்சியான சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனது வேட்பாளர்களைத் தனியாகவே போட்டிக்கு நிறுத்தியிருந்தமையால் பேரம் பேசுதல் மிகவும் கெடுபிடியாகவே இருக்கும் என்று சொல்லலாம். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் முஸ்லிம் காங்கிரஸ் இணைந்து செயற்படுமா அல்லது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட முடிவெடுக்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
 
 இன்னொரு பக்கம் முஸ்லிம் காங்கிரஸ் கவலை தெரிவித்துக் கொண்டு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்துகொள்ள முடிவு செய்யுமா என்ற கேள்வியும் எழுகின்றது.
 
தேர்தல் பிரசாரங்கள் பெரும் போராட்டங்களாக மாறியிருந்தன. அரசு சார்ந்த கோஷ்டிகள் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரிவினர் மீது பல கழுத்தறுப்புத் தாக்குதல்களை நடத்தியிருந்தார்கள். 
 
அரசு தரப்பின் கசப்புணர்வுகள் அமைச்சர் டலஸ் அளகப்பெருமாவின் கருத்தில் வெளியாகியிருந்தன. அமைச்சரவை சகாவும்  முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவூப் ஹக்கீம் அமைச்சரவையில் ஒரு கருத்தையும் கிழக்குத் தேர்தல் களத்தில் மக்கள் முன் வேறு கருத்தையும் வெளியிடுகிறார் என்று அவர் சாடியிருந்தார்.
 
முஸ்லிம் காங்கிரஸையும் மற்றும் தேசிய சுதந்திர முன்னணி ஆகிய கட்சிகளை தனித்தனியேயும் போட்டியிடவிட்டதன் புத்திசாலித்தனம் இப்போது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வட்டாரங்களில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
 
இந்தச் செயற்பாடு கட்சியின் வாக்குப் பலத்தை சிதறடித்துவிட்டதாகக் கருதப்படுகின்றது. இந்த மாகாண சபை தேர்தலானது ஜனதா விமுக்தி பெரமுனைக்கும் அதன் பலத்தை சோதிக்கும் சந்தர்ப்பமாக அமைந்திருந்தது. கட்சியில் பெரிய அளவில் பிரிவு ஏற்பட்டதன் பின்னர் முதல் தடவையாக ஜே.வி.பி. இந்த தேர்தலுக்கு முகம் கொடுத்திருக்கிறது.
 
தேர்தல் பணிக்கு 
அரச வளங்கள்
 
நேற்று முன்தினம் நடந்து முடிந்த மகாண சபைகளுக்கான தேர்தலின்போது ஒரு முக்கிய அம்சம் என்னவென்றால் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினர் அரச வளங்களை பெருமளவில் தமது தேர்தல் பணிகளுக்குப் பயன்படுத்திக் கொண்டார்கள் என்ற வகையில் எதிர்க்கட்சிகள் முன்வைத்த குற்றச்சாட்டுக்களாகும். 
 
தங்கள் ஆதரவாளர்கள் அரச தரப்பு ஆதரவாளர்களால் பல சந்தர்ப்பங்களில் தாக்கப்பட்டதாகவும் சில இடங்களில் அரச தரப்பினருக்குப் பொலிஸார் சாதகமாக நடந்து கொண்டார்கள் என்றும் அவர்கள் குற்றம் சாட்டினார்கள்.
 
இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ நாட்டை விட்டுச் சென்றிருப்பது இந்த விவகாரத்தில் எதிர்வு கூறல்தல்களை அதிகரித்துள்ளது. கிழக்கில் தேர்தல் பிரசார பணிகளுக்கு அரசு சார்பில் அவரே பொறுப்பாக இருந்து வந்தார்.
 
எதிர்த்தரப்பினர் தாக்கப்பட்டது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் இரா.ராஜவ ரோதயம் ஜனாதிபதிக்குக் கடிதம் எழுதியிருந்தார். கடிதத்தின் பிரதிகள் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவுக்கும் அனுப்பி வைக்கப்பட்டிருந்தன.
 
அரசுக்குள்
கருத்து மோதல்
 
அரசுக்குள் கருத்து மோதல்கள் உருவாகியிருப்பதாகக் கூறப்படுவதற்கு உதாரணமாக ஜெனிவா செல்லவிருக்கும் பிரதிநிதிகள் குழுவில் ஜனாதிபதியின் மனித உரிமைகளுக்கான சிறப்பு பிரதிநிதியான அமைச்சர் மஹிந்த சமரசிங்க சேர்த்துக் கொள்ளப்படாமல் இருப்பது சுட்டிக்காட்டப்படுகின்றது. கடந்த நான்கு வருடங்களாக அரசு மனித உரிமைகள் விடயத்தில் செயற்பட்ட விதம் குறித்து மனித உரிமைகள் சபையில் இலங்கை தயாரித்து வழங்கியுள்ள தேசிய செயற்றிட்டம் பற்றி உலகளாவிய பருவகால ஆய்வு நடக்கும்போது இந்தக் குழு கலந்துகொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
 
 பருவகால ஆய்வுக்கான தேசிய அறிக்கையை அமைச்சர் சமரசிங்கவே தயாரித்து வழங்கியிருந்தார். அந்த அறிக்கை இப்பொழுது மனித உரிமைகள் சபையின் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
 
மனித உரிமைகள் அல்லது ஐ.நா. மனித உரிமைகள் சபை தொடர்பான பிரச்சினைகளில் அமைச்சர்  சமரசிங்கவுடன் கலந்து பேசுவதை வெளியுறவு அமைச்சு அதிகாரிகள் நிறுத்திக் கொண்டுவிட்டதாகவும் அறியப்படுகின்றது.
 
மார்ச் மாதம் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான மனித உரிமைகள் சபை தீர்மானத்துக்கிணங்க அடுத்த வாரம் இலங்கைக்கு ஆலோசனை வழங்குவதற்காக இங்கு வரவிருக்கும் மனித உரிமைகள் சபை நிபுணர்கள் வரவு பற்றியும் கூட அமைச்சர் சமரசிங்கவுடன் கலந்து பேசப்படவில்லை என்று கூறப்படுகின்றது. 
 
ஜெனிவாவில் மனித உரிமைகள் சபையில் அமைச்சர் சமரசிங்க நடந்து கொண்ட விதம் குறித்து வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் ஜனாதிபதி ராஜபக்ஷவுக்கு ஆட்சேபனை தெரிவித்திருந்தமை இங்கு நினைவு கூரத்தக்கது.
 
அந்த சமயத்தில் ஜனாதிபதி அமைச்சர் பீரிஸைக் கடிந்து கொண்டு அரசு பொது எதிரியுடன் போராடிக் கொண்டிக்கும்போது பிரிவினைகள் தேவையில்லையென்று குறிப்பிட்டிருந்தார்.
 
இந்த நிலைமையில் அமைச்சர் சமரசிங்க ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவிடம் கடுமையான ஆட்சேபனையொன்றை வெளியிட்டதாகத் தகவல் கசிந்துள்ளது.
 
இதன் காரணமாக, வெளியுறவு அமைச்சு ஏற்கனவே அதன் செயலாளர் கருணாதிலக்க அமுனுகம மூலமாக நவம்பரில் பருவகால ஆய்வு மனித உரிமைகள் சபையில் எடுத்துக் கொள்ளப்படும்போது இலங்கையில் இருந்து அமைச்சர்கள் மட்டத்தில் எவரும் கலந்துகொள்ளமாட்டார்கள் என்று விடுத்திருந்த அறிக்கையில் மாற்றம் செய்துள்ளது. 
 
அந்த விடயத்தில் இன்னும் முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என்று அவர் இப்போது கூறுகிறார். கடந்த வாரம் அவர் விடுத்த அறிக்கையில் இலங்கைத் தூதுக்குழுவுக்கு ஜெனிவாவிலுள்ள ஐ.நா.வுக்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க தலைமை வகுப்பார் என்று கூறியிருந்தார். அமைச்சர் சமரசிங்க தாமே தயாரித்த தேசிய அறிக்கையை ஆதரித்து வாதிடுவதற்கு ஜெனிவாவுக்குச் செல்வார் என்று இப்போது தகவல்கள் தெரிவிக்கின்றன. 
 
அமைச்சரவைக்கான சட்ட ஆலோசகர் மோகன் பீரிஸ், சட்டமா அதிபர் பாலித்த பெர்னாண்டோ மற்றும் அமைச்சு அதிகாரி ஒருவரும் அவருடன் செல்வார்கள் என்று தெரிகிறது.
 
அடுத்த வருடம் மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் மனித உரிமைகள் மாநாட்டில் ஏற்கனவே சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இலங்கை நடைமுறைப் படுத்தியுள்ள விதம் குறித்து ஆராய்வுக்கு எடுத்துக் கொள்வதற்கு முன்னதாக உலகளாவிய பருவகால ஆய்வு நடைபெறவிருக்கின்றது.
 
அமெரிக்க உதவி
செயலர் வருகிறார்
 
தெற்கும் மற்றும் மத்திய ஆசியாவுக்கான அமெரிக்க உதவி செயலாளர் றொபேர்ட் ஓ பிளேக் செப்ரெம்பர் 12 ஆம் திகதியிலிருந்து 14 ஆம் திகதி வரை கொழும்பில் தங்குவார். அப்போது இரு நாடுகளுக்குமிடையிலான விடயங்கள் மற்றும் ஜெனிவா தீர்மானம் குறித்தும் இலங்கைத் தலைவர்களுடன் ஆலோசனைகள் நடத்துவார். கடந்த வெள்ளிக்கிழமை இலங்கை வந்து சேர்ந்த அமெரிக்காவின் புதிய தூதுவர் மிக்செல் சிஸனும் இந்த சந்திப்புகளின் போது உடன் இருந்து கலந்துகொள்வார்.
 
இலங்கையர்
தாக்கப்பட்ட விவகாரம்
 
கடந்த வெள்ளிக்கிழமை பத்திரிகையாளர்களுடனான ஒரு சந்திப்பில் தமிழ் நாட்டில் இலங்கையர்கள் தாக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த விவகாரம் குறித்து இந்திய மத்திய அரசுடன் பேசுவீர்களா? என்று கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த ஜனாதிபதி ராஜபக்ஷ, பல சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்றுள்ளன. இந்திய மத்திய அரசின் கவனத்துக்கு இந்த விடயத்தை கொண்டு சென்றுள்ளோம். 
 
சாதகமான பதிலும் கிடைத்துள்ளது. செப்ரெம்பர் 19 ஆம் திகதி இந்தியாவுக்கு நான் செல்லவிருக்கிறேன். சந்தர்ப்பம் கிடைத்தால் இந்த விடயத்தையும் எடுத்துப் பேசுவேன். சிறிய குழுவினர்தான் இதனை செய்கிறார்கள். இந்திய ஊடகங்களும் ஏனைய கட்சிகளும் நல்லபடியாக செயற்பட்டுள்ளன என்று கூறினார்.
 
கடந்த வியாழக்கிழமை புறக்கோட்டையிலுள்ள இந்திய வம்சாவளியினரான வர்த்தகர்களைக் கொண்ட தமிழ் வர்த்தகர்கள் சங்கத்தினர் தமது வர்த்தக நிலையங்களை மூடி விட்டு காலி வீதியிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகர் நிலையத்துக்கு பவனியாகச் சென்று உயர் ஸ்தானிகர் அஷோக் காந்தாவிடம் மனு ஒன்றை கையளித்தார்கள்.
 
 இலங்கையில் இருந்துவரும் யாத்ரீகர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை உடனடியாக நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கும்படி அதில் இந்திய பிரதம மந்திரி மன்மோகன் சிங்கையும் தமிழ்நாடு திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.கருணாநிதியையும் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது. ஆனால் தமிழ் நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பிரதி எதுவும் அனுப்பப்பட்டதற்கான குறிப்பு எதுவும் தரப்பட்டிருக்கவில்லை.

No comments:

Post a Comment