Translate

Tuesday 25 September 2012

மெனிக்பாம் மூடல்--ஐநா எச்சரிக்கையுடன் வரவேற்கிறது


முகாமிலிருந்து வெளியேறும் மக்கள் இலங்கையில் போரினால் இடம் பெயர்ந்த மக்களுக்காக ஏற்படுத்தப்பட்ட மெனிக்பாம் முகாமில் எஞ்சியிருந்த மக்களும் முகாமை விட்டு வெளியேறிய நிலையில், அந்த முகாம் மூடப்பட்டாலும், இலங்கை அரசு, நாட்டில் போரினால் இடம்பெயர்ந்து தற்போதும் முறையாக மீள் குடியேற்றம் செய்யப்படாமல் நண்பர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்கள் வீடுகளில் வசிக்கும் மக்களின் நிலைக்கு தீர்வு காணுமாறு ஐநா மன்ற மனித நேய அலுவலகம் வலியுறுத்தியிருக்கிறது.

மெனிக் பாம் மூடப்பட்டதை வரவேற்றுள்ள ஐநா மன்ற மனித நேய அலுவல்களுக்கான இலங்கை ஒருங்கிணைப்பாளர் , சுபினாய் நந்தி, விடுத்துள்ள அறிக்கை ஒன்றில், இந்த சம்பவம், இலங்கையில் போர் முடிந்து மூன்றாண்டுகளுக்குப் பின்னர், அங்கு போரின் காரணமாக ஏற்பட்ட இடப்பெயர்வை முடிவுக்குக் கொண்டுவரும் ஒரு மைல் கல் போன்ற சம்பவம் என்று கூறியிருக்கிறார்.
ஆனாலும், இன்னும் பலர் தத்தம் வீடுகளுக்குத் திரும்ப முடியாத நிலை இருக்கிறது என்று சுட்டிக்காட்டிய நந்தி, அவர்களது பிரச்சினைக்கு ஒரு அவசர தீர்வு காணப்படவேண்டும் என்று கூறியிருக்கிறார்.
முகாமிலிருந்து வெளியேறும் மக்கள்
மெனிக்பாம் முகாமிலேயே எஞ்சியிருந்த கடைசித் தொகுதி மக்களான, கேப்பாபுலவு கிராமவாசிகள், அவர்களது கிராமம் இன்னும் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதால் அங்கு திரும்பிச்சென்று தங்களது இயல்பு வாழ்க்கையைத் தொடரமுடியாத நிலை ஏற்பட்டிருப்பதைப்பற்றி கவலை தெரிவிக்கும் ஐ.நா அலுவலகம், அவர்கள் அரசுக்குச் சொந்தமான வேறிடங்களுக்கு மீள்குடியேற்றம் செய்யப்பட்டு, அவர்களது சொந்த நிலங்களின் கதி என்ன என்பதைப் பற்றி இன்னும் அதிகாரபூர்வத் தகவல் எதுவும் தெரிவிக்கப்படாத நிலை ஏற்பட்டிருப்பதை சுட்டிக்காட்டுகிறது.
மெனிக் பாம் மூடப்பட்டது என்பது மோதல் நிலையிலிருந்து, தொடர்ந்து நீடிக்கக்கூடிய ஒரு அமைதியான நிலைக்கு இலங்கை செல்வதைக் காட்டும் ஒரு குறிப்பிடத்தக்க சமிக்ஞைதான் என்று கூறும் ஐ.ந மன்ற மனிதநேய அலுவலகம், ஆனாலும், யாழ்ப்பாணத்திலும் வவுனியாவிலும், இன்னும் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளிலும், நலன்புரி நிலையங்களிலும் பல ஆண்டுகளாக வசித்துக் கொண்டிருக்கும் இடம்பெயர்ந்த மக்களின் பிரச்சினைக்கு நீடித்து நிற்கக்கூடிய தீர்வு ஒன்று காணப்படவேண்டும் என்று கூறியது.
இலங்கை அரசு, போரினால் இடம் பெயர்ந்த மக்களின் உரிமைகள் குறித்து நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்று கூறும் ஐநா மன்ற அலுவலகம், இந்த மக்களை நாட்டின் எந்தப் பகுதியிலும் மீண்டும் குடியேற அனுமதிப்பதும், தங்கள் சொந்த இடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டு, வேறிடங்களில் குடியேற நேர்ந்துள்ள மக்களுக்கு, அவர்கள் குடியேறியுள்ள காணிகளின் சட்டபூர்வ உரிமை குறித்த பிரச்சினைகளைத் தீர்ப்பதும் , நல்லிணக்க வழிமுறையின் முக்கியமான பகுதியாகும் என்று நந்தி கூறினார்.
இலங்கையில் போர் முடிந்த 2009ம் ஆண்டு மே மாதம், சுமார் 700 ஹெக்டேர் நிலப்பரப்பில் மெனிக்பாம் முகாம் உருவாக்கப்பட்டது. அதில் ஒரு கட்டத்தில் சுமார் 225,000 இடம்பெயர்ந்த மக்கள் இருந்தனர். அந்த முகாமுக்கு சர்வதேச நிறுவனங்கள் கூடாரம், உணவு, குடிநீர், சுகாதாரம், பள்ளிக்கூடங்கள் மற்றும் மருத்துவ வசதிகளை அளித்து வந்தன.

No comments:

Post a Comment