Translate

Tuesday, 25 September 2012

பிரபாகரனை brave man என்றார் ராஜீவ்:சுப.வீ விழாவில் கலைஞர்


புத்தக வெளியீட்டு விழாக்கள் என்பவை அரசியல் பரபரப்புக்கிடையே தனக்குக் கிடைக்கும் இளைப்பாறல் என்று சொல்வார் கலைஞர்.

2ஜி வழக்கில் ஆ.ராசாவுக்கு ஜாமீன் கிடைத்த மே 15ந் தேதி, கலைஞருக்கு கூடுதல் மகிழ்ச்சியும் நிம்மதியும் கிடைக்கும் வகையில் சென்னை காமராஜர் அரங்கில் நடைபெற்றது பேராசிரியர் சுப.வீ எழுதிய வானவில் புத்தகாலயத்தின் 5 புத்தகங்களின் வெளியீட்டு விழா.




திராவிடத்தால் எழுந்தோம் என்ற வரலாறு, குறள் வானம் என்ற இலக்கியம், கவிதா என்ற நாவல், வந்ததும் வாழ்வதும் என்ற சுயசரிதை, பெரியாரின் இடதுசாரித் தமிழ்த்தேசியம் என்ற தத்துவ விளக்கம் என 5 வகை புத்தகங்களைக் கலைஞர் வெளியிட, மத்திய இணையமைச்சர் ஜெகத்ரட்சகன் பெற்றுக்கொண்டார்.
வழக்கம்போலவே வைணவத் தமிழ்ப்பாடல்களைக் கலைஞர் பாசுரங்களாக்கி பாராட்டைக் கொட்டி, அரங்கத்திலிருந்தவர்களின் கைதட்டல்களை அள்ளினார் ஜெகத்ரட்சகன்.  

புத்தகங்களைப் பற்றி பேசச்சொல்லுங்க என்று மேடையிலிருந்தவர்களிடம் தெரிவித்தார் கலைஞர். பேராசிரியர் அப்துல்காதர், முன்னாள் துணைவேந்தர் அவ்வை நடராசன் ஆகியோரின் உரைக்குப் பிறகு, நட்பின் அடிப்படையில் மேடைக்கு வந்த கவிஞர் வைரமுத்து, கல்லூரிக் காலத்திலிருந்து தனக்கும் சுப.வீக்குமான நட்பையும் அவரது கொள்கைப் பற்றையும் எடுத்துக் கூறினார்.
திராவிட இயக்கம் தனது நூற்றாண்டில் எதிர்கொள்ளும் சவால்களையும், இதை இப்படியேவிட்டால் மீண்டும் நம் நெற்றியில் சூத்திரன் என்று பச்சைக் குத்திவிடும் ஆரியம் என்றும் அண்மைக்கால பத்திரிகை செய்திகளை ஆவணங்களாக எடுத்துவைத்து உரையாற்றினார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி.

இது எனது 27 ஆண்டுகால கனவு என நெகிழ்ச்சியுடன் ஏற்புரையாற்றிய சுப.வீ, திராவிட இயக்கத்திற்காக உழைக்கவேண்டும் என்பதைத்தவிர வேறெந்த எதிர்பார்ப்பும் இல்லை என்றார் நன்றிப்பெருக்குடன்.
கலைஞரின் சிறப்புரை முழுவதும் தமிழீழம் பற்றியே அமைந்திருந்தது. விரைவில் சென்னையில் டெசோ மாநாடு நடத்தப்படும் என்று அறிவித்த கலைஞர், பிரதமராக ராஜீவ் இருந்தபோது தன்னை டெல்லிக்கு அழைத்து, பிரபாகரனை brave man   என்று குறிப்பிட்டதுடன் நீங்களும் மாறனும் வைகோவும் கொழும்புக்குச் சென்று அங்குள்ள நிலவரங்களைச் சொல்லுங்கள்.
தமிழீழம் அமைய நான் உதவுகிறேன் என்று நம்பிக்கை தெரிவித்ததையும், பின்னர் அந்த வாய்ப்பு தவறிப்போனதற்கான காரணங்களை இப்போது சொல்லி விவகாரமாக்கவில்லை என்றார். தமிழீழம் அமைவதற்காக அறவழியில் டெசோ அமைப்பு தொடர்ந்து போராடும் என்று தன் பேச்சை நிறைவு செய்தார் கலைஞர்.
விழா முடிந்து வெளியேறிய பார்வையாளர்கள் பலரது கைகளிலும் சுப.வீயின் திராவிடத்தால் எழுந்தோம் என்ற புத்தகத்தைக் காண முடிந்தது.
படங்கள் : எஸ்.பி.சுந்தர்

No comments:

Post a Comment