"வடக்கு மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு 13 ஆம் திருத்தச்சட்டம் தடையாகவிருந்தால் அதைத் திருத்துவதோ அல்லது இல்லாமல் செய்வதோ தப்பில்லை. அவ்வாறு செய்யவேண்டிய நிலை ஏற்படும்போது சர்வ ஜன வாக்கெடுப்பை நடத்தவும் அரசு தயார்.
13ஆம் திருத்தச் சட்டத்தில் குறைபாடுகள் இருந்தால் அதைத் திருத்துமாறு அல்லது இல்லாமல் செய்யுமாறு வடக்கு மக்களே கோரிக்கை விடுப்பர். மக்களுக்கு அதி காரங்களைக் கொடுப்பதற்காக 13 ஆம் திருத்தச்சட்டத்தை ஒழித்து 19ஆம் திருத்தச்சட்டத்தைக் கொண்டுவருவதற்கும் நாம் பின்வாங்கமாட்டோம்.''
இவ்வாறு பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ நேற்று தமிழ் பத்திரிகையாளர்களைச் சந்தித்து உரையாற்றியபோது கூறினார்.
அவர் மேலும் கூறியவை வருமாறு:
மக்களுக்காகவே சட்டங்கள் உருவாக்கப்படுகின்றன. அதற்கான அதிகாரத்தை மக்கள் அவர்களின் பிரதிநிதிகளிடம் ஒப்படைக்கின்றனர். மக்களின் தேவைகளை நிறைவேற்ற அவர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க அச்சட்டங்கள் தடையாக அமைந்தால் அவற்றைத் திருத்துவதோ அல்லது இல்லாமல் செய்வதோ தப்பில்லை.
அதேபோல், வடக்கு மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காகவும் அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகவுமே 13 ஆம் திருத்தச்சட்டம் கொண்டுவரப்பட்டது. அவர்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கு அச்சட்டம் தடையாக இருந்தால் அதை வைத்திருந்து என்ன பிரயோசனம்?
13 ஆம் திருத்தச் சட்டத்தில் குறைபாடுகள் இருக்கின்றன என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் புலிகளும்தான் ஆரம்பத்தில் கூறினர். அச்சட்டத்தைக் கடுமையாக எதிர்த்தனர். இச்சட்டம் உருவாக்கப்பட்டதன் காரணமாகவே புலிகள் இந்தியப் பிரதமர் ராஜிவ் காந்தியைக் கொலை செய்தனர்.
தெற்கு மக்களை விடவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத்தான் இச்சட்டத்தைக் கடுமையாக எதிர்க்கின்றது. ஆகவே, இச்சட்டத்தில் குறைபாடுகள் இருக்கின்றன என்பதையே இந்த எதிர்ப்புகள் காட்டுகின்றன.
நாம் பலமிக்க அரசு. மக்களுக்கான சேவைகளை மேற்கொள்ளும்போது எச்சட்டமும் எம்மைத் தடைசெய்யாது. 13 ஆவது திருத்தச்சட்டம் நடைமுறையில் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி மக்களுக்கான எமது சேவை தொடரும்.
ஏதேனும் ஒரு சட்டம் மக்களுக்கான சேவைக்குத் தடையாக இருந்தால் அச்சட்டத்தை மக்களே நீக்குவர். உணவு சமைக்கவே நெருப்பைப் பயன்படுத்தவேண்டும். அந்த நெருப்பு ஊரையே அழிக்கும் அளவுக்கு மாறினால் அந்த நெருப்பை அணைத்துத்தான் ஆகவேண்டும். அதேபோலத்தான் மக்களுக்கு எதிரான சட்டங்களும் கையாளப்பட வேண்டும்.
13ஆவது திருத்தச்சட்டத்தைப் பிழையாகப் பயன்படுத்த எவராவது முயற்சி செய்தால் அச்சட்டத்தை இல்லாது செய்ய மக்களே முயற்சிப்பர். இச்சட்டத்தை இல்லாது செய்வதற்கு அல்லது திருத்துவதற்கு சர்வஜன வாக்கெடுப்புத் தேவை என்றால் அதையும் நாம் நடத்துவோம்.
மக்களுக்கு அதிகாரத்தைக் கொடுப்பதற்காக வடக்கு மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்காக நாம் 13ஆவது திருத்தத்தை இல்லாமல் செய்து 19 ஆவது திருத்தச்சட்டத்தைக் கொண்டுவரவும் தயார்.
No comments:
Post a Comment