Translate

Tuesday 23 October 2012

ஆயுதப் போருக்கு மீண்டும் வலிந்து அழைக்கும் முயற்சி

news
13ஆவது அரசமைப்புத் திருத்தத்தை இல்லா தொழிக்கவேண்டுமென எழுப்பப்படும் கோஷங்கள் மீண்டுமொரு ஆயுதப் போராட்டத்துக்கு வலிந்து விடுக்கப்படும் அறைகூவலாகவே அமைந்துள்ளதென ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பங்காளிக் கட்சியான இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.

 
அத்துடன், 13 ஆவது அரசமைப்புத் திருத்தம் இல்லா தொழிக்கப்படுமாயின் அது பிரபாகரனுக்கு கிடைக்கும் வெற்றியாகவே அமைந்து விடும் என்று அக் கட்சியின் தலைவரும், மனிதவள விவகாரம் தொடர்பிலான சிரேஷ்ட அமைச்சருமான டியூ குண சேகர தெரிவித்தார்.
 
13 ஆவது அரசமைப்புத் திருத்தம் இல்லாதொழிக்கப்பட வேண்டுமென பாதுகாப்புச் செயலாளர் அண்மையில் ஆங்கில ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்டிருந்தார். இந்தக் கருத்துக்கு ஆதரவாக அமைச்சர்களான விமல் வீரவன்ஸ, சம்பிக்க ரணவக்க ஆகியோர் குரல்கொடுத்து வருகின்றனர்.
 
இதனால் இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. இந்நிலையில், 13 ஆவது அரசமைப்புத் திருத்தம் இல்லாதொழிக்கப்படவேண்டுமென வெளியாகும் கருத்துகள் தொடர்பில் தமது கட்சியின் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்துகையிலேயே அமைச்சர் டியூ குணசேகர மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 
அவர் மேலும் கூறியவை வருமாறு:
ஜனநாயகத்தை நிலைநாட்டும் நோக்கிலேயே 13 ஆவது அரசமைப்பின் பிரகாரம் மாகாணசபை முறைமை கொண்டுவரப்பட்டது. அதிகாரங்களைப் பகிர்வதன் மூலம் அனைத்து மக்களுமே நன்மையடைவர். எனவே, இதுகுறித்து ஏன் எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும்?
 
அன்று எதிர்க்கட்சியில் இருந்துகொண்டு 13 ஆவது அரசமைப்புத் திருத்தத்துக்கு நான் ஆதரவாக வாக்களித்தேன்.
 
இதனால் என்னைக் கொலை செய்வதற்கு ஜே.வி.பியினர் பத்துத் தடவைகள் முயற்சித்தனர். இவ்வாறு கொலைக் கலாசாரத்தை விரும்புபவர்களே 13 ஆவது அரசமைப்பின் பிரகாரம் கொண்டுவரப்பட்ட மாகாணசபை முறைமையை எதிர்க்கின்றனர்.
 
குறிப்பாக, 13ஆவது அரசமைப்புத் திருத்தம் இல்லாதொழிக்கப்படுமானால் அது பிரபாகரனை வெற்றிபெறவைக்கும் விடயமாகவே அமையும். குறித்த அரசமைப்புத் திருத்தம் தொடர்பில் அன்று புலிகள் முன்வைத்த கூற்றுகள் நியாயமாக மாறிவிடும். 
 
இதைக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாகவே நான் தெரிவிக்கின்றேன், அரசின் சார்பாக அல்ல. அதேவேளை, இவ்வாறான கோஷங்கள் மீண்டுமொரு ஆயுதப் போராட்டத்துக்கு விடுக்கப்படும் அழைப்புகளாகவே அமைந்துள்ளன. எனவே, கொலைக் கலாசாரத்தை விரும்பும் தரப்பே 13 ஆவது அரசமைப்புத் திருத்தத்தை எதிர்க்கின்றது என்றும் அமைச்சர் டியூ தெரிவித்தார்.

No comments:

Post a Comment