Translate

Monday 22 October 2012

13ம் திருத்தச் சட்டம் ரத்து செய்யப்பட வேண்டுமென பாதுகாப்புச் செயலாளர் மீண்டும் வலியுறுத்து


13ம் திருத்தச் சட்டம் ரத்து செய்யப்பட வேண்டுமென பாதுகாப்புச் செயலாளர் மீண்டும் வலியுறுத்து
 13ம் திருத்தச் சட்டம் மீளவும் ரத்து செய்யப்பட வேண்டுமென பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ மீண்டும் வலியுறுத்தியுள்ளார். யுத்தத்தின் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் தந்திரோபாயங்கள், 13ம் திருத்தச் சட்டத்தை ரத்து செய்யுமாறு வலியுறுத்தும் வகையில் அமைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நடவடிக்கைகள் குறித்து அரசாங்கம், எதிர்க்கட்சிகள் மற்றும் சர்வதேச சமூகம் கவனம் செலுத்த வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். 13ம் திருத்தச் சட்டத்தை ரத்து செய்வது குறித்து பாராளுமன்றமே தீர்மானிக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார். வடக்கில் இராணுவ முகாம்களை அமைக்கும் பணிகளுக்கு உதவிகளை வழங்க வேண்டாம் என சீனத் தூதரகத்திடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் விடுத்த கோரிக்கைகளுக்கு பதிலளிக்கும் வகையில் பாதுகாப்புச் செயலாளர் இதனைத் தெரிவித்துள்ளார்.
 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்தி வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். தமிழர் பிரதேசங்களில் இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டு வருவதாக கூட்டமைப்பினர் சுமத்தி வரும் குற்றச்சாட்டுக்கள் முட்டாள்தனமானவை என பாதுகாப்புச் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
யுத்தம் இடம்பெற்ற காலத்திலும், சமாதானம் நிலவும் காலத்திலும் பாதுகாப்பு விவகாரங்களில் தலையீடு செய்யும் அதிகாரமோ உரிமையோ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு கிடையாது என அவர் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளினால் யுத்த ரீதியாக அடைய முடியாத இலக்குகளை அடைவதற்கான களமாக 13ம் திருத்தச் சட்டத்தை சிலர் பயன்படுத்திக் கொள்ள முயற்சிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
 
அரசாங்கம் நட்பு நாடுகளுடன் பேணி வரும் உறவுகளை விரிசலை ஏற்படுத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மேற்கொண்டு வரும் முயற்சிகள் புரிந்து கொள்ளப்பட வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் சீனர்கள் மீது இரண்டு தடவைகள் தாக்குதல் நடத்தி கொலை செய்த போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இரங்கல் செய்திகளைக் கூட வெளியிடவில்லை என அவர் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேவையற்ற வகையில் இன முரண்பாடுகளைத் தூண்ட முயற்சித்து வருவதாக பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment