Translate

Monday, 15 October 2012

சட்டத்தில் உள்ள உரிமைகளுக்குகூட கோத்தாபய தடை போடுகிறார்! சந்தேசிய சிங்கள வானொலியில் மனோ குற்றச்சாட்டு

அரசியலமைப்பு சட்டத்தில் உறுதி செய்யப்பட்டுள்ள 13 ம் திருத்தத்தை தமிழர்கள் அனுபவிக்க தடை போடுவதன்மூலம், அரசாங்க ஊழியரான பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ச தனது வரம்பை மீறி பேசுகிறார் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் லண்டன் பிபிசியின் சந்தேசிய சிங்கள வானொலி சேவைக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார். இந்த பேட்டியில் மனோ கணேசன் மேலும் குறிப்பிட்டதாவது,


நீங்கள் உள்ளூராட்சி தேர்தல் முறைமை மாற்றம் பற்றி கேட்கின்றீர்கள். புதிய சட்டங்களை பற்றி கேட்கின்றீர்கள். எமக்கு இன்றுள்ள முதன்மை பிரச்சினை இதுவல்ல. ஜனாதிபதியின் சகோதரரான கோத்தாபய ராஜபக்ச 13ம் திருத்தத்தை அகற்ற வேண்டும் என்றும், மாகாணசபை முறைமையை ஒழிக்க வேண்டும் என்றும் பேசுகிறார். இவர் இதை எந்த அதிகாரத்தில், எவ்விதம் சொல்லுகிறார் என எனக்கு தெரியவில்லை. அவர் இன்னமும் ஒரு அரசு ஊழியர். ஆனால் அவர் தனது வரம்பை மீறி அரசியல்வாதியைபோல் பேசுகிறார்.
இந்த கதைகளை பார்க்கும் போது உண்மையில், புதிய தேர்தல் முறைமையை கொண்டு வருவதற்கோ அல்லது புதிய சட்டங்களை கொண்டுவருவதற்கோ முன்னர், இருக்கும் சட்டங்களையும், அரசியலமைப்பில் இருக்கும் அதிகாரங்களையும் பாதுகாத்துக்கொள்ள வேண்டிய சிக்கல் எமக்கு ஏற்பட்டுள்ளது. இந்நாட்டில் வாழும் சிங்களவர் அல்லாத மக்களுக்கு குறிப்பாக தமிழ், முஸ்லிம் மக்களுக்கு இந்த நிலை இன்று ஏற்பட்டுள்ளதை இந்த இடத்தில் சொல்லியே ஆக  வேண்டும்.   

விருப்பு வாக்கு முறைமை தீங்கானது என்று சொல்லி இந்த உள்ளூராட்சி தேர்தல் சட்டத்தை திருத்தி உள்ளார்கள். உண்மையில்  அதுவல்ல இவர்களின் பிரதான நோக்கம். வட-கிழக்குக்கு வெளியில் சிறுபான்மையினராக பல்லின சூழலில் வாழும் தமிழ், முஸ்லிம் மக்களின் பிரதிநிதித்துவங்களை வெட்டி குறைப்பதே இவர்களது பிரதான நோக்கம்.

கடந்த தேர்தலின் போது கொழும்பு கொலொன்னாவை பகுதியில் இரண்டு ஆளும் கட்சி அரசியல்வாதிகள் சுட்டுக்கொண்டார்கள். இதை அடுத்து இந்த விருப்பு வாக்கு முறைமையை மாற்ற வேண்டும் என்ற கூக்குரல் கூடியுள்ளது. விருப்பு வாக்கு முறையினால் ஒரே  கட்சிக்குள் சச்சரவு ஏற்படுகிறது என சொல்கிறார்கள். உண்மையில்,  இது கட்சிகளின் ஒழுங்கு பிரச்சினை. ஒரே கட்சி என்றபடியால் கொலொன்னாவையில் நான்கு பேர் செத்தார்கள்.

அதுவே, இரண்டு வேவ்வேறு ஆளும் கட்சி, எதிர்கட்சிகளுக்கு இடையில் நடைபெற்று இருந்தால், நான்கு பேருக்கு பதில் நாற்பது பேர் செத்து ஒழிந்திருப்பார்கள். எனவே இந்த சண்டைகளுக்கு காரணம், விருப்பு வாக்கு என்பது அல்ல. இந்த  நாட்டில் இன்று நிலவுகின்ற கொலைவெறி  கலாச்சாரம்தான் அனைத்துக்கும் காரணம் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். 
http://tamilleader.c...5-09-14-39.html 

No comments:

Post a Comment