Translate

Friday 19 October 2012

கிழக்கில் கூட்டமைப்பிற்கு ஆதரவளித்த பட்டதாரிகளுக்கு அரசு பாரபட்சம்


கிழக்கில் கூட்டமைப்பிற்கு ஆதரவளித்த பட்டதாரிகளுக்கு அரசு பாரபட்சம்
  • tna_19
    ஜனநாயக, சட்ட, நிர்வாக நடைமுறைகள் அனைத்தையும் தூக்கியெறிந்துவிட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வாக்களித்தவர்கள் என்ற ரீதியில் நியமிக்கப்பட்ட பட்டதாரிகளை வெளியேற்றுவது மக்களுக்கு சேவை செய்யப் புறப்பட்ட அரசியல்வாதிகளுக்கு அழகல்ல என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான பொன்.செல்வராசா, கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான கி.துரைராஜசிங்கம், பிரசன்ன இந்திரகுமார் ஆகியோர் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எம்.சார்ள்ஸை சந்தித்து பட்டதாரிகளின் நியமனங்கள் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகள் தொடர்பில் மேற்கொண்ட பேச்சுவார்த்தையினை தொடர்ந்து விடுத்துள்ள கூட்டு அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
    அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
    எதிர்க்கட்சியும் ஆளுங்கட்சியும் சேர்ந்த நிறுவனமே அரசாங்கமாகும். இந்நிலையில் ஆளுங்கட்சியினர் தாங்கள் தான் அரசாங்கம் எனச் சொல்வதும் செயற்படுவதும் அரசியலமைப்பிற்கு முரணான செயற்பாடாகும். அதுமட்டுமல்ல அரசியல் மேடைகளிலும் பாராளுமன்றம் போன்ற அரசியல் சபைகளிலும் மட்டுமே அரசியல்வாதிகள் அரசியல்வாதிகள் என்னும் அந்தஸ்தில் செயற்பட முடியும். ஏனைய சந்தர்ப்பங்களிலெல்லாம் குறிப்பாக நிர்வாக விடயங்களில் சம்பந்தப்படும்போது நிர்வாகத்திற்கு உதவும் வகையிலேயே செயற்பட வேண்டும்.
    அதாவது அரசியல்வாதிகள் நிர்வாக விடயங்களில் சம்பந்தப்படும்போது நிர்வாகத்தை நெறிப்படுத்துகின்ற தாபனவிதிக் கோவையின் ஏற்பாடுகளுக்கு அமைவாக பணியாற்ற வேண்டிய அவசியம் உண்டு. இவ்வகையில் செயற்படும்போது குறித்த நிர்வாக செயற்பாட்டில் சம்பந்தப்படுபவர் நாட்டின் பிரஜை என்ற ரீதியில் பார்க்கப்படவேண்டுமேயொழிய அரசியற்கண்கொண்டு அவர் எந்த கட்சியின் ஆதரவாளர் என்ற அடிப்படையில் பார்க்கப்படலாகாது.
    மேற்குறித்த நடைமுறைகளை தெரிந்துகொள்ளாமலோ அல்லது தெரிந்திருந்தும் அவற்றை புறந்தள்ளியோ நடந்துகொள்வதால் ஊழல், பாதிப்பு, நிர்வாக சீர்கேடு என்பன நிகழ்கின்றன.
    பட்டதாரிப் பயிலுநர்களாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் நியமனம் பெற்றவர்களின் நியமனங்களை உறுதிப்படுத்தும் செயற்பாட்டில் மேற்குறித்த நியமனங்களை கடைப்பிடிக்காது இரு அரசியல்வாதிகள் செயற்பட்டமை பெருங்குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
    பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் 428 பேர் நியமனம்பெற்றிரந்தார்கள். இவர்களின் நியமனங்களை உறுதிப்படுத்துவதற்கான கடிதங்கள் மட்டக்களப்பு செயலகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. 428 கடிதங்களும் செயலாளரினால் ஒப்பமிடப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ள போதிலும் நியமனத்திற்குரிய பட்டதாரிகளின் பெயர்கள் குறித்த பத்திரத்தில் குறிப்பிடப்படாது அதற்குரிய இடம் வெற்றாகவே விடப்பட்டுள்ளது.
    குறித்த நியமனக் கடிதங்களுக்குரிய விளக்கக் கடிதத்தில் மேற்படி நியமனங்கள் பிரதேச அபிவிருத்திக் குழுத் தலைவரால் அங்கீகரிக்கப்பட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
    எந்தெந்த பிரதேச செயலகத்திற்கு யார் யார் நியமிக்கப்பட்டுள்ளார்களோ அவர்களின் பெயர்களை அதற்குரிய அதற்குரிய அதிகாரி குறித்துக் கொடுத்ததும் தமது அங்கீகாரத்திற்கான கையொப்பத்தை குறித்த நியமனக் கடிதத்தில் இடுவதே பிரதேச அபிவிருத்திக் குழுத் தலைவரின் செயற்பாடாகும்.
    மட்டக்களப்பு மாவட்டத்தில் நான்கு பிரதேச அபிவிருத்திக் குழுத் தலைவர்கள் உள்ளார்கள். இவர்களில் மாகாணசபை உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களும் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஅவர்களும் அரசியற்தனமாய் நடந்துகொண்டமையால் 31 பட்டதாரிகள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
    இந்த 31பேரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிற்கு வாக்களித்தவர்கள் என குறிப்பிட்ட மேற்படி இருவரும் அவர்களின் பெயர்களை நீக்கிவிட்டு தங்கள் ஆதரவாளர்கள் 31பேரின் பெயர்களை குறித்த நியமனக் கடிதங்களில் பதியச்செய்துள்ளனர். புதிய இந்த 31பேரும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சிற்கான நேர்முகத் தேர்வில் பங்குபற்றாதவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
    இந்த நடவடிக்கையை எதிர்த்தும் தமக்கு நியாயம் வழங்கக்கோரியும் ஆரையம்பதி பிரதேச செயலகத்திற்கு முன்னால் பாதிக்கப்பட்ட பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். அங்கு சென்ற மாகாணசபை உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் இந்த நியமனங்கள் திவிநெகும சம்பந்தப்பட்டதெனவும் இச்சட்டமூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த தமிழ்த்தேசியக் கூட்டமைப்பே அவர்களின் கோரிக்கைக்கும் பதிலளிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
    மாகாணசபை உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களின் இக்கூற்று தொடர்பாக நாம் விசனமடைகின்றோம். ஏற்கனவே குறிப்பிடப்பட்டுள்ளது போல் நிர்வாக விடயங்களை அரசியல்வாதிகள் கையாளும்போது தாபனவிதிக் கோவையை அனுசரித்தே செயற்பட வேண்டும்.
    இவ்வகையில் நேர்முகத் தேர்வில் தெரிவுசெய்யப்பட்டு நியமிக்கப்பட்டவர்களை நீக்கியமையும் அவ்விடயங்களுக்கு நிர்வாக உத்தியோகத்தர்களால் நேர்முகம் காணப்பட்டவர்களின் பெயர்களை பதிலீடு செய்தமையும் அரச அதிகாரிகளின் கடமையில் தலையீடு செய்ததாயும் தாபனவிதிக்கோவைக்கு அமையாத நியமனங்களை வழங்கியதாயும் அமைகின்றது.
    மேலும் குறித்த 31பேரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிற்கு வாக்களித்தவர்கள் என்ற அடிப்படையில் நீக்கப்பட்டுள்ளமை அரசியலமைப்புச் சட்டத்தில் 10ஆம் உறுப்புரையில் குறித்துரைக்கப்பட்டுள்ள சிந்தனை செய்யும் சுதந்திரம், மனச்சாட்சியை பின்பற்றும் சுதந்திரம் என்பவற்றுக்கு எதிராக அமைவதால் பாதிக்கப்பட்ட பட்டதாரிகளின் அடிப்படை உரிமையை மீறியுள்ளமையை காட்டுகின்றது.
    பட்டதாரிப் பயிலுநர்கள் ஏன் ஆர்ப்பாட்டம் செய்கின்றார்கள் எனத் தெரிந்திருந்தும் அவ்விடம் சென்று அவர்களின் ஆதங்கங்களை கேட்டு ஆறுதல் வழங்கவோ பரிகாரம் வழங்கவோ முற்படாது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினரிடம் சொல்லுங்கள் என்ற ரீதியில் பதிலளித்தமை வலிந்து சென்று ஆங்காரத்துடன் பதிலளித்தமையையே காட்டுகின்றது.
    ஏனைய இரண்டு பிரதேச அபிவிருத்திக் குழுத் தலைவர்களும் நிர்வாக முறைப்படியும் தமது அதிகார வரம்பிற்குள்ளும் செயற்பட்டுள்ள நிலையில் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களும் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஅவர்களும் நிர்வாக நடைமுறையை மீறியும் தமது அதிகார வரம்பிற்கு அப்பாலும் செயற்பட்டுள்ளனர்.
    அரசியல்வாதிகள் ஏற்கனவே குறிப்பிட்ட அரசியல் நிறுவனங்களிலல்லாது ஏனைய இடங்களில் செயற்படும்போது மக்களின் உரிமைகளில் சம்பந்தப்படுகின்ற நிர்வாக நடவடிக்கைகளில் தாக்கம் ஏற்படுத்துவதால் சட்டத்தின் முன் சகலரும் சமன் என்ற அடிப்படையிலே மக்களை அரசியல் அடிப்படையில் பேதப்படுத்தாது அனைவருக்கும் சேவை வழங்க கடமைப்பட்டவர்கள்.
    இவ்வாறான ஜனநாயக, சட்ட, நிர்வாக நடைமுறைகள் அனைத்தையும் தூக்கியெறிந்துவிட்டு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிற்கு வாக்களித்தவர்கள் என்ற ரீதியில் நியமிக்கப்பட்ட பட்டதாரிகளை வெளியேற்றுவது மக்களுக்கு சேவை செய்யப் புறப்பட்ட அரசியல்வாதிகளுக்கு அழகல்ல.
    தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு போட்டியிடாத காலத்திலே தமிழன் என்பதற்காக வாக்களித்து இனியொருபோதும் எய்த முடியாத முதலமைச்சர் ஸ்தானத்தில் உங்களை உயர்த்தி வைத்த வாக்காளர்களில் இந்தப் பட்டதாரிகளும் அவர்களின் குடும்பத்தவர்களும் உள்ளடங்குவார்கள் என்பதை சந்திரகாந்தன் அவர்கள் நினைத்துப் பார்க்க வேண்டும்.
    அரசாங்கக் கட்சிக்குத்தான் வாக்களிக்க வேண்டுமென்றால் தேர்தல் என்னும் ஏற்பாடு அரசியலமைப்பில் இடம்பெற்றிருக்க மாட்டாது. மக்கள் ஆணையை மதித்து அவர்களின் விருப்புக்கேற்ற ஆட்சியை வழங்குவதே நல்லாட்சியின் இலக்கணம்.
    நமக்கு ஆதரவளித்தவர்கள் குறுகிய நோக்கங்களுக்காக ஆதரவளித்திருந்தால் அவற்றை நிறைவேற்றி வைக்க வேண்டும் என்பது எவ்வகையிலும் நியாயமானதல்ல. அவ்விதம் செய்ய முற்படுவது ஊழலுக்கே வழிவகுக்கும்.
    எனவே நமது சந்ததியினரான இளந்தலைமுறையினரின் நெஞ்சங்களில் வெறுப்பையும் வேதனையையும் வைராக்கியத்தையும் வளர்க்கும் வகையிலான செயற்பாடுகளை கைவிட்டு அவர்களெல்லாம் இந்த நாட்டின் பெறுமதியான வளங்கள் என்ற கருத்தாக்கத்துடன் காரியமாற்றுவதே நாம் நமது சமுதாயத்திற்குச் செய்யும் தொண்டாகும்.
    இந்த அடிப்படையில் ஏற்கனவே செய்யப்பட்ட நடைமுறைகளை குழப்பாத வகையில் இடையில் செய்யப்பட்ட ஏற்பாடுகளை திருத்தியமைக்க நடவடிக்கை எடுப்பதே யாவர்க்கும் நலம் பயக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம்.

No comments:

Post a Comment