Translate

Friday, 19 October 2012

வடக்கில் படைமுகாம்கள் ஒருபோதும் அகற்றப்படா; வெளியாரின் அழுத்தங்களுக்குப் பணியோம்; ஜனாதிபதி சூளுரை

வடக்கில் படைமுகாம்கள் ஒருபோதும் அகற்றப்படா; வெளியாரின் அழுத்தங்களுக்குப் பணியோம்; ஜனாதிபதி சூளுரை
news
சர்வதேச நீதிமன்றத்தின் முன் படையினரை நிறுத்துவதற்கு வடக்கு, கிழக்கிலிருந்து படையினரை அகற்றுமாறு கோஷ மெழுப்பும் தரப்பு முயற்சிக்கின்றது. வடக்கிலிருந்து அரசு படைகளை விலக்கிக்கொள்ள வேண்டுமென்பதற்காகத்தான் சர்வதேசத்தின் மத்தியில் படையினருக்குக் களங்கத்தை ஏற்படுத்துகின்றனர். எது எப்படியிருந்தபோதிலும் மற்றைய வர்களின் தேவையின் நிமித்தம் எம்மால் நடவடிக்கை எடுக்கமுடியாது.

 
 இவ்வாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ காட்டமாகக் கருத்து வெளியிட்டுள்ளார். அலரிமாளிகையில் நேற்று நடைபெற்ற படையினரின் பெற்றோருக்கான காப்புறுதிக் கொடுப்பனவு நிகழ்வில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
 
அவர் மேலும் கூறியவை வருமாறு:
 
நாட்டில் தீவிரவாதம் துடைத்தெறியப்பட்டு மூன்று வருடங்களுக்கும் மேலாகியுள்ளன என நான் நினைக்கின்றேன். யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்தாலும் தேசிய பாதுகாப்புத் தொடர்பில் இருக்கின்ற அர்ப்பணிப்பைக் குறைத்து விடவில்லை. அதேபோன்று, இராணுவத்தினருக்கிருக்கின்ற சலுகைகளையும் நாம் கடுகளவேனும் குறைக்கவில்லை.
 
பல வருடங்களாக தேசிய பாதுகாப்புக்காக வரவு  செலவுத்  திட்டத்தினூடாக அதிக நிதி ஒதுக்கீடுகளைச் செய்கின்றோம். குறிப்பாக, 230 பில்லியன் ரூபாவை இராணுவ பராமரிப்பு, சம்பளம், சீருடை, எரிபொருள் ஆகியவற்றுக்காக ஒதுக்குகின்றோம். யுத்தம் முடிவடைந்துள்ளதால் அதற்கான செலவினங்கள் தற்போது மிஞ்சியுள்ளன என சிலர் கூறுகின்றனர். ஆனால், நாட்டுக்காக உயிரைத் தியாகம் செய்த அதேபோன்று செய்வதற்கு முன்வந்த தரப்பினரை என்றுமே பாதுகாக்கவேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே நாம் இருக்கின்றோம். 
 
2009ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இராணுவத்தினர் கிளிநொச்சியைக் கைப்பற்றும்போது அவர்களுக்கிருந்த ஆற்றலை நாட்டு மக்கள் அறிந்தனர். இதை இன்று சிலர் மறந்துவிட்டனர்; மறப்பதற்கு முற்படுகின்றனர். ஆனால், நாம் அப்படிச் செய்யமாட்டோம்.
 
அதேவேளை, படையினரின் பிள்ளைகளுக்குத் தனியான பாடசாலை, புலமைப்பரிசில், அவர்களுள் பல்கலைக்கழகம் செல்லும் மாணவர்களுக்கு விசேட புலமைப்பரிசில்களைப் பெற்றுக்கொடுத்து படையினரின் குடும்பங்களை வலுப்படுத் துவதற்கு  அபிவிருத்தியடையச் செய்வதற்குத் தேவையான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. அத்துடன், படையினருக்காக வீடமைப்புத் திட்டங்களை பல மாவட்டங்களில் அமைத்துக் கொடுத்துள்ளோம்.
 
1983ஆம் ஆண்டிலிருந்து 2019 மே மாதம் 19 ஆம் திகதிவரை சேவையிலிருந்த படையினரின் பெற்றோருக்கு அவர்களின் வாழ்நாள் முழுவதும் கொடுப்பனவொன்று வழங்கப்படும். இதற்கான திட்டமொன்றும் உள்ளது.
 
அதுமட்டுமன்றி, படையினரை நட்சத்திரம், சுப்பர்ஸ்டார் என்ற நிலைமைக்கும் நாம் இன்று கொண்டுவந்துள்ளோம். துப்பாக்கி ஏந்தியுள்ள ஒரு தரப்புதான் படையினர் என்ற கருத்தே இதுவரையும் இருந்தது. எனினும், அவர்கள் பல்வேறு துறைகளிலும் தமக்குள்ள திறமைகளை வெளிப்படுத்தியுள்ளதால் அந்தக் கூற்று மாறியுள்ளது. படையினருக்கான இவ்வாறான வேலைத்திட்டங்களை முன்னெடுத்த ஒரே நாடு இவ்வுலகில் இலங்கைதான்.
 
எனினும், இந்நிலைமையை சிலர் விரும்பவில்லை. படையினரை சர்வதேச நீதிமன்றத்துக்கு அனுப்புவதே அவர்களின் தேவையாக உள்ளது. அத்துடன், மனித உரிமைகளை மிலேச்சததனமாக மீறியவர்கள் என அவ நாமத்தை ஏற்படுத்து வதும் அவர்களின் தேவையாக உள்ளது.
 
சர்வதேச ஊடகங்களைப் பயன்படுத்திக்கொண்டு போலியான திரைப்படங்களைத் தயாரித்துப் படையினரை நிந்திக்கின்றனர். வடக்கு, கிழக்கிலிருந்து படையினரை அகற்றவேண்டும் எனக் கோஷமெழுப்புபவர்கள் இதைத்தான் செய்கின்றனர். வடக்கு, கிழக்கு பிரதேசம் எமதில்லையா? நாட்டைப் படையினர் பாதுகாப்பதன் காரணமாகவே நாம் படையினரை நாடு முழுவதும் நிறுத்தியுள்ளோம். வேறு தரப்பினரின் தேவைக்கேற்ப நடவடிக்கைகளை முன்னெடுக்க இடமளிக்க முடியாது.

No comments:

Post a Comment