Translate

Wednesday, 17 October 2012

இராணுவத்தை கலியாணம் கட்டினால் பிரச்சனை இல்லை: பலியாகும் தமிழ்ப் பெண்கள் !

யாழ் மற்றும் வன்னி பெருநிலப்பரப்பில், முன்னர் பொங்கு தமிழ் நிகழ்வுகளில், கலந்துகொண்ட பெண்களையும், மற்றும் முன் நாள் பெண்போராளிகள், புலிகளுக்கு உதவிய பெண்கள் இராணுவத்தின் புலனாய்வாளர்களால் குறிவைக்கப்பட்டு பழிவாங்கப்பட்டு வருகின்றனர். சமீபத்தில் நடந்த உண்மைச் சம்பவம் ஒன்றை அதிர்வு இணையம் இங்கே பதிவுசெய்கிறது.


இராணுவம் புலனாய்வுப் பிரிவினர், யாழ் மற்றும் வன்னியில் இயங்கிவரும் ஒட்டுக்குழுக்களின் உதவியோடு, முன்னர் புலிகளுக்கு உதவிய பெண்களை தேடிக் கண்டுபிடித்து அவர்களை பாலியல் ரீதியாகக் கொடுமைப்படுத்தி வருகின்றனர். போதாக்குறைக்கு ஈ.பி.டி.பி ஒட்டுக் குழுவும் இதற்கு உடந்தையாக இருக்கிறார்கள். அண்மையில் தேராவில் பகுதியில் உள்ள முன்னாள் பெண்கள் மாணவர்படையில் பயிற்சிபெற்ற ஒரு மாணவியை, இராணுவ புலனாய்வுத்துறையினர் விசாரணை என்று கைதுசெய்துசெய்துள்ளனர். 4 நாட்கள் இராணுவத்தினரதும், புலனாய்வு பிரிவினதும் இரக்கமற்ற பாலியல் கொடுமைகளின் பின்பு விடுதலை செய்யபட்டுள்ளார். தாமினி (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) என்னும் இந்த பெண் கடந்த 14.09.2012 அன்று தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது வெறும் தற்கொலையாகவே பொலிசாரால் பதிவிசெய்யப்பட்டு, வழக்கும் மூடப்பட்டது.

ஆனால் தற்கொலையின் பின்னணியில் பல திடுக்கிடும் உண்மைச் செய்திகள் வெளியாகியுள்ளது. இரண்டு இராணுவச் சிப்பாயும், இரண்டு புலனாய்வுப் பிரிவினரும் தாமினி என்ற இந்தப் பெண் வீட்டிற்கு அடிக்கடி சென்று, விசாரணை என்ற பெயரில் அவரையும் குடும்பத்தாரையும் அச்சுறுத்தி வந்துள்ளனர். படிப்பறிவற்ற தாய் தந்தையரால் இந்த அச்சுறுத்தலை சமாளிக்க முடியவில்லை. இதனை மனித உரிமை குழுவிடம் கொண்டுசெல்லலாம் என்று கூட அவர்களுக்குத் தெரியாத நிலை இருந்திருக்கிறது. பல தடவை ஆசுறுத்தலுக்கு உள்ளான இப் பெண்ணுக்கு, சில அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. அதாவது இராணுவ சிப்பாய் ஒருவரை இவர் மணந்தால், பிரச்சனைக்கான விடை கிடைக்கும் என்று சொல்லப்பட்டதோடு, அவர் போராட்டத்துக்கு உதவிய விடையங்களும் இதன் மூலம் மறைக்கப்படும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

தங்களுடன் ஒத்துளைக்கும் பட்சத்தில் உனது உயிருக்கும், குடும்பத்தினரது உயிருக்கும் எந்தவிதமான ஆபத்தும் இல்லை என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளார் இப் பெண். இதனை அடுத்து ஆட்டோ சாரதியான பொன்னுத்துரை என்பவருக்கு இராணுவத்தில் சிலரைத் தெரியும் என்ற காரணத்தால், இது குறித்துப் பேசி, இனியாவது எங்களை தொந்தரவு படுத்தவேண்டாம் என்று சொல்லுங்கள் என தாமினியின் குடும்பத்தார் கேட்டுள்ளனர். பொன்னுத்துரையும் தனக்கு தெரிந்த அதிகாரிகளிடம் இது குறித்துப் பேசியுள்ளார். சில நாட்கள் கழித்து பொன்னுத்துரை ஆட்டோ நிலையத்தில் இருந்தவேளை அங்கே வந்த மூவர், தாம் புதுக்குடியிருப்புக்குச் செல்லவேண்டும் எனக்கூறி ஆட்டோவை வாடகைக்கு அமர்த்தியுள்ளனர். மனித நடமாட்டமற்ற பகுதி ஒன்றில் ஆட்டோ சென்றவேளை, பின்னால் இருந்த மூவரும் பொன்னுத்துரையை மடக்கி அவரின் கழுத்தை பிளேட்டால் வெட்டிக் கொலைசெய்ய முயற்சித்துள்ளனர். அதிஷ்டவசமாக உயிர் பிழைத்த பொன்னுத்துரை, அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.

இதன் பின்னர் பல தடவைகள் இராணுவத்தினரது பாலியல் வன்முறையினால் கற்பம் தரிக்கப்பட்ட தாமினி, இறுதியில் தனது வயிற்றில் சிங்கள வெறியரின் குழந்தையை சுமக்க முடியாமலும், இராணுவத்தின் கொடுமைகளைத் தாங்க முடியாமலும், தனது 2 சகோதரர்களின் எதிர்காலத்தை மனதில் கொண்டும் தற்கொலை ஒன்றே முடிவு என நினைத்து, கிருமிநாசினி உண்டு தற்கொலை செய்துள்ளார். இத் தற்கொலை குடும்ப வறுமை என்று பலராலும் பரவலாகப் பேசப்பட்டபோதிலும் நடந்த உண்மை இதுதான். இதேவேளை யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயது நிரம்பிய மாணவி ஒருவர் தனதும், தங்களினது குடும்பத்தினதும் எதிர்காலம் கருதி ஒரு சிங்கள இராணுவப் புலனாய்வு அதிகாரியை திருமணம் செய்து தற்பொழுது கம்பகா மாவட்டத்தில் வசித்து வருகின்றார். இராணுவத்தினர் தற்போது புதிய யுக்தி ஒன்றைக் கையாண்டு வருகின்றனர். புலிகளோடு தொடர்புடைய குடும்பங்களை அறிந்து, தம்போன்ற இராணுவச் சிப்பாய்களைக் கலியாணம் கட்டினால், பிரச்சனை இல்லாது வாழலாம் என்று கூறி அவர்களை, அச்சுறுத்தி மணம் முடித்து வருகின்றனர். இது எங்கு போய் முடியுமோ தெரியவில்லை !

No comments:

Post a Comment