Translate

Sunday, 14 October 2012

இலங்கையின் அரசியல் தீர்வில் இந்தியக் கட்சிகள் ஒரே அணி; தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் சுஷ்மா தெரிவிப்பு

இலங்கையின் அரசியல் தீர்வில் இந்தியக் கட்சிகள் ஒரே அணி; தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் சுஷ்மா தெரிவிப்பு
news
 இந்தியாவுக்குப் பல பிரச்சினைகள் உள்ளன. ஆயினும் இலங்கைத் தமிழர்களின் விவகாரத்தில் இந்தியக் கட்சிகள் அனைத்தும் ஒரே நிலைப் பாட்டிலேயே உள்ளன.
 
இலங்கைத் தமிழருக்கு ஒரு நீதியான கௌரவமான நிரந்தர அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும் என்பதே அந்த நிலைப்பாடு. இலங்கைத் தமிழ் மக்களை இந்தியா கைவிடமாட்டாது. இந்தியாவில் ஆட்சிகள் மாறலாம்.
 
ஆனால், நாம் ஒரே அணியாக நின்று இலங்கைப் பிரச்சினைக்கு தீர்வு காணமுயல்வோம் என்று இந்திய எதிர்க்கட்சித் தலைவி சுஷ்மா சுவராஜ் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் உறுதி அளித்துள்ளார்.
 
இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையிலான குழுவினர் நேற்று முன்தினம் மாலை இந்திய எதிர்க்கட்சித் தலைவி சுஷ்மா சுவராஜை அவரது உத்தியோக பூர்வ இல்லத்தில் சந்தித்துப் பேசினர். 
 
சுமார் ஒருமணி நேரம் இந்தச் சந்திப்பு இடம் பெற்றுள்ளது. இந்தச் சந்திப்பின் போதே இந்திய எதிர்க்கட்சித் தலைவி மேற்கண்டவாறு குறிப்பிட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கநாதன் "உதய'னிடம் கூறினார்.
 
"இந்திய அரசுக்கு நாட்டுக்குள் பல பிரச்சினைகள் உள்ளன. அவை குறித்து இந்தியக் கட்சிகள் வெவ்வேறு நிலைப்பாடுகளைக் கொண்டுள்ளன. ஆயினும் இலங்கைத் தமிழர்கள் விடயத்தில் இந்தியக் கட்சிகள் அனைத்துமே ஒருமித்த நிலைப்பாட்டிலேயே உள்ளன.
 
இலங்கைத் தமிழர்களுக்கு ஒரு நீதியான, நியாயமான தீர்வு கிடைக்க வேண்டும் என்பதில் இந்தியக் கட்சிகள் அனைத்தும் தெளிவாக உள்ளன. அதில் மாற்றுக் கருத்துக்கு இடமே இல்லை. இதுகுறித்து இந்திய மத்திய அரசிடம் நாங்கள் பேசியிருக்கிறோம்.
 
தமிழர் பிரச்சினைக்கான தீர்வை விரைவு படுத்த வேண்டும் என்று இலங்கை அரசுக்கு தொடர்ந்து அழுத்தங்களை வழங்குமாறு மத்திய அரசிடம் வலியுறுத்தி வருகின்றோம். நாங்கள் இலங்கைத் தமிழரை ஒருபோதும் கைவிட மாட்டோம். 
 
அவர்களுக்குத் தீர்வு கிடைக்க இந்தியா நிச்சயம் உதவும்.'' என்று சுஷ்மா சுவராஜ் இந்தச் சந்திப்பில் குறிப்பிட்டதாக செல்வம் மேலும் கூறினார். இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை தான் சந்தித்த போது இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு நல்லதொரு சந்தர்ப்பம் தற்போது கிடைத்துள்ளது எனவும் அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்துமாறு அவரிடம் கோரியதாகவும், ஆனால் இலங்கை ஜனாதிபதி அதனை நடைமுறைப்படுத்தாதது தனக்குக் கவலையளிப்பதாகவும் சுஷ்மா குறிப்பிட்டதாக செல்வம் தெரிவித்தார்.
 
இந்தச் சந்திப்பின்போது தமிழர் பிரதேசங்களில் தற்போது மேற்கொள்ளப்பட்டுவரும் நில அபகரிப்பு, புதிய படைமுகாம்கள் அமைக்கப்படுகின்றமை உட்பட பல்வேறு பிரச்சினைகள் குறித்து கூட்டமைப்பின் பிரதிநிதிகள் இந்திய எதிர்க்கட்சித் தலைவருக்குத் தெளிவாக எடுத்துரைத்ததாக அடைக்கலநாதன் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment