Translate

Sunday 14 October 2012

பொறுமையின் எல்லையில் இந்தியா

பொறுமையின் எல்லையில் இந்தியா
essayஇந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய தூதுக் குழுவினருக்குமிடையே இடம் பெற்ற முக்கிய சந்திப்பு இலங்கைத் தமிழர்கள் மத்தியில் நம்பிக்கையையும் புதுத்தெம்பையும் ஊட்டியுள்ள அதேநேரம் தென்னிலங்கை அரசியல்வாதிகள் மத்தியிலும் கடும்போக்கையுடைய சிங்கள இனவாத சக்திகள் மத்தியிலும் பெரும் கிலேசத்தையும் ஆத்திரத்தையும் தோற்றுவித்துள்ளது.

 
இலங்கைத் தமிழர்கள் இன்று எதிர்கொண்டு வரும் மிகமோசமான நெருக்கடி, மீள்குடியமர்வுப் பிரச்சினைகள், இராணுவப் பிரசன்னம், நில அபகரிப்பு என்பன குறித்து இந்தியாவின் கவனத்துக்குக் கொண்டு வருவதற்கு இந்தச் சந்திப்பை வடக்குகிழக்கு தமிழ் மக்களின் பிரதிநிதிகளான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நன்கு பயன்படுத்திக்கொண்டமை எதிர்காலத்தில் பல்வேறு நம்பிக்கை தரும் மாற்றங்களுக்கு வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
 
இந்திய அரசின் விசேட அழைப்பின் பேரில் புதுடில்லிக்குப் புறப்பட்டுச் சென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா,  செல்வம் அடைக்கலநாதன், சுரேஷ் பிரேமச்சந்திரன், அ.விநாயகமூர்த்தி,  பொன்.செல்வராசா,எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் இந்த விசேட சந்திப்புகளில் கலந்துகொண்டு இலங்கைத் தமிழர்களின் இன்றைய துயரநிலை குறித்து தெளிவாக எடுத்துக் கூறியுள்ளனர்.
 
இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குடனான சந்திப்பு மிகவும் பயன்மிக்கதாகவும் உணர்வுபூர்வமானதாகவும் இருந்ததாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் செய்தியாளர்களிடம் தெரிவித்திருக்கிறார்.
 
ஏற்கனவே இடம்பெற்ற சந்திப்புக்கள் போல இல்லாமல் இந்தச் சந்திப்பு மிக முக்கிய அம்சங்களை உள்ளடக்கியதாக அமைந்திருக்கிறது. இலங்கை தமிழர்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் இந்தியா கொண்டுள்ள அக்கறை இந்தச் சந்திப்பில் முற்று முழுதாக வெளிப்படுத்தப்பட்டதாக சம்பந்தன் மேலும் கூறியிருக்கிறார்.  
 
 
அதிலும் முக்கியமாக இனப்பிரச்சினைக்கான தீர்வை எட்டுவதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இந்தியா இணைந்து பணியாற்ற விரும்புவதாக பிரதமர் மன்மோகன் வெளியிட்ட கோரிக்கை முக்கியம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. 
 
பிரதமரின் இந்தக் கோரிக்கைக்குக் கூட்டமைப்பினரும் இணக்கத்தை வெளியிட்டமை எதிர்காலத்தில் தீர்வு விடயத்தில் கூட்டமைப்பும் இந்தியாவும் கூட்டாகச் செயற்படப்போகும் நிலையைத் தெளிவாகக் காட்டுகிறது.
 
இதுவரை இலங்கை அரசுக்குத் தீர்வை வழங்குமாறு அழுத்தத்தைக் கொடுப்பதாகவும் அதற்கான ஆலோசனைகளை வழங்குவதாகவும் தெரிவித்து வந்த இந்திய அரசு இப்போது தீர்வை எட்டுவதற்குக் கூட்டமைப்புடன் இணைந்து பணியாற்ற முன்வந்திருப்பது வரவேற்புக்குரியதுடன் இலங்கை இனப்பிரச்சினை விடயத்தில் இந்தியா கொண்டுள்ள தீவிர அக்கறையையும் வெளிக்காட்டுகிறது எனலாம். 
 
இந்தியப் பிரதமருடனான சந்திப்பின்போது இரு தரப்பும் இணைந்து பணியாற்ற காணப்பட்ட இணக்கம் குறித்து இலங்கை அரசுக்கும் தெரியப்படுத்துமாறு கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் பிரதமர் மன்மோகனிடம் கேட்டுக்கொண்டமை தீர்வு காண்பதற்கான முயற்சிகளை வலுப்படுத்தும் ஒரு நடவடிக்கையாக அமைவதுடன் இலங்கை அரசை எச்சரிக்கும் ஒரு நிகழ்வாகவும் அமையும் என அரசியல் அவதானிகள் கூறுகிறார்கள். 
 
"தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்பதில் இந்தியா மிகுந்த கவனம் செலுத்திவருகிறது. அந்தத் தீர்வு விரைவாக எட்டப்படவேண்டும் என்பதிலும் நாம் கவனமாக இருக்கிறோம். இதற்காக இலங்கைக்கு முழு அழுத்தங்களை வழங்கிவருகிறோம். இலங்கையில் வாழும் அனைத்துத் தமிழர்களின் உரிமைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பதில் இந்தியா தெளிவாக இருக்கிறது'' என்று இந்தியப் பிரதமர் இந்தச் சந்திப்பில் குறிப்பிட்டதாக சம்பந்தன் செய்தியாளர்களிடம் தெரிவித்திருக்கிறார்.
 
மன்மோகன் சிங்குடனான இந்தச் சந்திப்புக் குறித்து கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முழுத் திருப்தி தெரிவித்திருக்கிறார்கள். சந்திப்பின் ஆரம்பத்தில் தமக்கு என்றுமே இல்லாதவாறு ஒரு வரவேற்பு அளிக்கப்பட்டதாகவும் பேச்சு முடிவடைந்ததும் பிரதமர் செயலக வாசல்வரை வந்து மன்மோகன் சிங் தங்களை வழி அனுப்பி வைத்ததாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். 
 
பிரதமரின் இந்தச் செயற்பாடு இலங்கை இனப்பிரச்சினை விடயத்தில் அவர் கொண்டுள்ள அதிக அக்கறையையும் இலங்கைத் தமிழ் மக்கள் மீதான மிகுந்த மரியாதையையும் வெளிப்படுத்துவதாக அமைகிறது எனவும் குறிப்பிட்டார்.  
இந்தச் சந்திப்பின் முடிவில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், "இந்தச் சந்திப்பின் போது இலங்கை அரசினால் அமைக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்கேற்க வேண்டும் என்ற கோரிக்கை எதனையும் பிரதமர் மன்மோகன்சிங் எம்மிடம் விடுக்கவில்லை. தெரிவுக்குழு குறித்துக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டை இந்தியப் பிரதமருக்கு விளக்கினோம். 
ஏற்கனவே இணக்கம் காணப்பட்டதைப் போல முதலில் அரசு கூட்டமைப்பு இடையேயான பேச்சுக்கள் ஆரம்பிக்கப்படவேண்டும். அந்தப் பேச்சுக்களில் எட்டப்படும் இணக்கப்பாடுகளை தெரிவுக்குழுவுக்குக் கொண்டு வரவேண்டும். 
அவ்வாறு செயற்பட அரசு முன்வந்தால் தெரிவுக்குழு பற்றி பரிசீலிப்பதற்குக் கூட்டமைப்பு தயாராகவே உள்ளது. அதனை விட்டு உடனடியாக தெரிவுக்குழுவுக்கு வருமாறு இலங்கை அரசு கூறுவதை ஏற்க முடியாது. 
அரசை நம்புவதற்கு கூட்டமைப்பு தயாரில்லை. ஏனெனில் ஏற்கனவே பேச்சின்போது எட்டப்பட்ட பல முடிவுகள் இன்னும் செயற்படுத்தப்படவில்லை. 
இவ்வாறான நிலையில் தெரிவுக்குழுவுக்குச் சென்று மீண்டும் ஏமாறுவதற்கு கூட்டமைப்பு தயாரில்லை. அத்துடன் தமிழ் மக்களைத் தொடர்ந்து நெருக்கடிக்குள் தள்ளவும் கூட்டமைப்பு விரும்பவில்லை. அரசிடம் இருந்து ஓர் உறுதியான செயற்திட்டம் கிடைத்தால் மட்டுமே தெரிவுக்குழு பற்றி பரிசீலிக்கப்படும்'' என்று இந்தியப் பிரதமரிடம் தெளிவாகச் சுட்டிக்காட்டியதாகக் கூறியிருக்கிறார்.  
 
மீளக்குடியமர்வு எனக் கூறி அரசு மக்களை காடுகளில் கொண்டுசென்று இறக்கிவிட்டிருப்பது, சர்வதேசத்தைத் திருப்திப்படுத்த இவ்வாறான மோசமான செயற்பாடுகளை அரசு மேற்கொள்வது, அத்துடன் உயர்பாதுகாப்பு வலயம் என்ற போர்வையில் மக்களின் குடியிருப்புகள் விடுவிக்கப்படாமல் உள்ளமை, தமிழ் மக்களின் காணிகள் படையினரால் அபகரிக்கப்படுகின்றமை ஆகிய  விடயங்களையும் கூட்டமைப்பு இந்தியப் பிரதமரிடம் சுட்டிக்காட்டியுள்ளது. அத்துடன் இலங்கை இந்திய மீனவர் பிரச்சினை குறித்தும் இந்தச் சந்திப்பில் பேசினோம் என்று சம்பந்தன் தெரிவித்தார்.
 
பிரதமர் மன்மோகன் சிங்கை அடுத்து இந்தியத் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனனையும் கூட்டமைப்பின் குழுவினர் சந்தித்துப் பேசியிருக்கிறார்கள். இந்தச் சந்திப்பில் ஒரு மிக முக்கிய விடயம் ஆராயப்பட்டிருக்கிறது. அதாவது இந்திய அகதி முகாம்களிலுள்ள ஈழத் தமிழ் அகதிகளின் எதிர்காலம் குறித்து இதில் அதிகம் பேசப்பட்டிருக்கிறது. இதன்போது கூட்டமைப்பு இந்திய மத்திய அரசிடம் ஒரு கோரிக்கையையும் முன்வைத்திருக்கிறது. 
 
ஈழ அகதிகளை இலங்கைக்குத் திருப்பி அனுப்புவதானால் அதற்கான ஒரு செயற்றிட்டத்தை இந்தியா வகுக்க வேண்டும். அவர்கள் இங்கு வருவதானால் அவர்களுக்கான பொருளாதாரம், பாதுகாப்பு, இல்லிட வசதிகள் அனைத்தையும் இந்தியா பொறுப்பெடுக்க வேண்டும். அவர்களை இங்கு கொண்டு வருவதற்கு முன்னர் அவர்களுக்கு இந்த வசதிகள் வழங்கப்படும் என்ற ஒரு விசேட அறிவித்தலையும் விடுக்க வேண்டும். அவ்வாறானதொரு செயற்றிட்டம் தயாரிக்கப்பட்ட பின்பே அவர்களை இலங்கைக்குத் திருப்பி அனுப்ப வேண்டும். 
இதனையே கூட்டமைப்பு எதிர்பார்க்கிறது என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இதனை ஒரு நல்ல விடயம் எனக் கூறி வரவேற்ற மேனன் அது குறித்து இந்திய மத்திய அரசு மற்றும் தமிழக அரசு ஆகியவற்றுடன் பேசி ஒரு சாதகமான முடிவை எடுப்பதாக உறுதியளித்திருக்கிறார். 
 
பிரதமர் மன்மோகன்சிங்கைச் சந்திப்பதற்கு முன்னர் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவையும் கூட்டமைப்பின் தூதுக்குழு சந்தித்திருந்தது. இந்தச் சந்திப்பில் இந்திய வெளிவிவகார அமைச்சர் கூட்டமைப்பினரிடம் தெரிவித்த கருத்து இலங்கை இனப்பிரச்சினை விடயத்தில் இந்தியா கொண்டுள்ள அதிதீவிர தன்மையை வெளிக்காட்டுகிறது. 
 
" இலங்கை இனப்பிரச்சினைக்கான தீர்வை முன்வைக்குமாறு இலங்கை அரசுக்கு எங்களாலான முழு அழுத்தங்களையும் வழங்கி வருகிறோம். இது குறித்து வெளிவிவகார அமைச்சு எமது அதிகாரிகளும் இலங்கைக்குத் தொடர் அழுத்தங்களை பிரயோகிக்கிறார்கள். ஆயினும் எதுவும் நடந்ததாகத் தெரியவில்லை. இந்தியாவின் பொறுமைக்கும் ஒரு எல்லையுண்டு'' என்று சற்றுச் சூடாக இலங்கை அரசை கண்டித்துக் கருத்து வெளியிட்டிருக்கிறார்.
 
 இந்தச் சூடான கருத்து இலங்கை மீது இப்போது இந்தியா கொண்டுள்ள கடும் அதிருப்தியான  இக்கட்டான நிலைமையை எடுத்துக் காட்டுகிறது என அரசியல் தலைவர்களும் கருத்து வெளியிட்டிருக்கிறார்கள். இலங்கை அரச தரப்பின் மூத்த அமைச்சரான திஸ்ஸ விதாரணவும் இதனைக் குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறார். 
 
கூட்டமைப்பின் இந்தியப் பயணம் அரசியல் தீர்வில் இந்தியா கொண்டுள்ள அதிக அக்கறையையே எடுத்துக் காட்டுகிறது எனத் திஸ்ஸ விதாரண தெரிவித்திருக்கிறார். கூட்டமைப்பின் இந்தப் பயணம் மூலம் இலங்கை அரசுக்கு நெருக்கடியான நிலைமை ஏற்பட்டிருக்கிறது. இனிமேல் இந்தியாவைச் சமாளித்து தீர்வை இழுத்தடிக்கும் சித்து விளையாட்டை காட்டமுடியாத நிலைக்கு அரசு தள்ளப்பட்டிருக்கிறது. 
 
அத்துடன் சிங்களப் பேரினவாத சக்திகளையும் கூட்டமைப்பின் இந்தியப் பயணம் கடும் கோபத்துக்கும் விசனத்துக்கும் உள்ளாக்கியிருக்கிறது. தமிழர் பிரச்சினையில் இந்தியா இவ்வாறு அதிக அக்கறை எடுத்து செயற்படுவதாக காட்டியிருக்கும் ஈடுபாடு குறித்து பலரும் பலவாறு பேசிக் கொள்கிறார்கள். 
ஆயினும் கூட்டமைப்புக்குக் கொடுத்த உறுதிமொழிகளை இந்திய அரசு இலகுவில் மீறிவிடாது என்பதே தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு. அந்த எதிர்பார்ப்பை எதிர்காலத்தில் இந்தியா எப்படி கையாளப் போகிறது என்பது போகப் போகத் தெரியவரும்.

No comments:

Post a Comment