Translate

Sunday 14 October 2012

கொலை முயற்சியில் இருந்து உயிர்தப்பினார் நல்லூர் பிரதேசசபைத் தலைவர்

news
நல்லூர் பிரதேச சபைத் தவிசாளர் இனந்தெரியாத நபர்களினால் தாக்கப்பட்டுள்ளார். நல்லூர் பிரதேசசபைக்குச் சொந்தமான காணியை சிறிலங்கா இராணுவத்தினர் அபகரித்துள்ளதற்கு எதிராக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிர்வாகத்தில் உள்ள நல்லூர் பிரதேசசபை கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது. 

சிறிலங்கா படையினரின் இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கைக்கு எதிராக, நாளை நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்க நல்லூர் பிரதேசசபை நடவடிக்கை எடுத்து வந்த நிலையிலேயே இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. 

இந்தத் தாக்குதலின் பின்னணியில் சிறிலங்கா படையினரே இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.


நல்லூர் பிரதேச சபை தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினருமான ப.வசந்தகுமார் இனந்தெரியாத நபர்களால் தாக்கப்பட்டு சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாரலயில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று பிற்பகல் கொக்குவில் அம்பட்டன் பாலம் பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த வீதியால் வந்து கொண்டு இருந்தவர் மீது இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த நபர்கள் தாக்குதலை நடத்தியுள்ளனர். இதன்போது காயமடைந்த தவிசாளர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

திருநெல்வேலி பாற்பண்ணையிலுள்ள நல்லூர் பிரதேச சபைக்கு சொந்தமான காணியை இராணுவத்தினர் ஆக்கிரமித்துள்ளனர். இதனால் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினை ஏற்கனவே பதிவு செய்திருந்தார். இந்நிலையில் குறித்த காணி நல்லூர் பிரதேச சபைக்கு சொந்தமானது என்ற ஆவணங்களை வழங்கும் படி கோப்பாய் பொலிஸார் கேட்டுள்ளனர்.

அதன்படி குறித்த காணிக்குரிய ஆவணங்களை கோப்பாய் பொலிஸில் நிலையத்தில் வழங்கிவிட்டு திரும்பிக் கொண்டிருக்கும் போதே அவர் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.

தாக்குதலை மேற்கொண்டவர்கள் அவரிடமிருந்த 40 ஆயிரம் ரூபாய்க்கு மேற்பட்ட பணம், கைத் தொலைபேசி மற்றும் ஆவணங்கள் அனைத்தையும் பறித்துச் சென்றுள்ளனர். எனினும் இச்சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸில் உறவினர்கள் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

பிரதேச சபைக்கு சொந்தமான குறித்த காணியில் சிறுவர் பூங்காவினை அமைப்பதற்கான ஏற்பாடுகளை பிரதேச சபை செய்ததுடன் சிறுவர் பூங்கா நல்லூர் பிரதேச சபை என்றும் பெயர் பலகையும் போடப்பட்டிருந்தது. ஆனால் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அப் பெயர்ப்பலகை இனந்தெரியாதவர்களினால் களற்றப்பட்டிருந்தாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இருப்பினும் குறித்த காணியை இராணுவம் கைப்பற்றக் கூடாது என்பதில் பிரதேச சபையின் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி என்பன ஒருமித்த குரலுடன் உள்ளனர். எனவே குறித்த காணியை மீட்பதற்கு மேல் நீதிமன்றில் முறைப்பாடு செய்வதுடன் மக்களைத் திரட்டிய ஆர்ப்பாட்டம் ஒன்றினையும் நடாத்துவது என சபையில் தீர்மானம் ஒன்றும் நிறைவேற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

No comments:

Post a Comment