ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தன்னுடைய மலேசியாவுக்கான பயணத்தை இறுதி நேரத்தில் எந்தவித காரணங்களும் தெரிவிக்காமல் திடீரென இடைநிறுத்தியுள்ளார்.
“போர்க்குற்றவாளியான மஹிந்த மலேசியாவுக்குள் காலடிவைத்தால் போராட்டங்கள் வெடிக்கும்” என்று மலேசியாவில் உள்ள அரச சார்பற்ற நிறுவனங்கள் குறிப்பாக தமிழ்த் தொண்டு அமைப்புகள் எச்சரித்திருந்தமையே இதற்கான காரணம் என்று கூறப்படுகிறது.
அடுத்த மாதம் 4ஆம் திகதி முதல் 6ஆம் திகதி வரை மலேசியாவில் உலக இஸ்லாமிய பொருளாதார மன்றத்தினரின் எட்டாவது மாநாடு நடைபெறவுள்ளது. இதில் கலந்துகொள்ளுமாறு ஜனாதிபதி மஹிந்தவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
ஆயினும் மலேசியாவுக்கு மஹிந்த வரப்போகின்றார் என்ற செய்தி வெளியான உடனேயே அந்த நாட்டில் வாழும் சுமார் 15 லட்சத்துக்கும் அதிகமான தமிழர்கள் கொதித்தெழுந்தனர்.
“இலங்கையில் இறுதிப்போரின் போது நடைபெற்ற படுகொலைகளுக்கு காரணகர்த்தவான போர்க்குற்றவாளியான மஹிந்த ராஜபக்ஷ மலேசியாவுக்குள் நுழையக்கூடாது” என்று அந்த நாட்டிலுள்ள அரச சார்பற்ற அமைப்புக்கள் போர்க்கொடி தூக்கின.
அதையும் மீறி மஹிந்த ராஜபக்ஷ மலேசியாவுக்குள் கால் கால் வைத்தால், பரவலான மக்கள் போராட்டம் நாடெங்கும் வெடிக்கும் என்று அந்த அமைப்புகள் எச்சரித்திருந்தன.
மஹிந்த ராஜபக்ஷ மலேசியாவுக்கு வந்தால் கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து அவரை வெளியேற விடாமல் முற்றுகைப் போராட்டத்தில் குதிக்கவும் அரச சார்பற்ற அமைப்புகள் ஏற்பாடு செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.
இந்த நிலையில், “தவிர்க்க முடியாத காரணத்தினால் ஜனாதிபதியின் வருகை கைவிடப்பட்டுள்ளது” என்று உலக இஸ்லாமிய பொருளாதார மன்றுக்கு மலேசியாவுக்கான இலங்கைத் தூதுவர் அலுவலகம் அறிவித்துள்ளது.
பிரிட்டன், அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு மஹிந்த பயணம் செய்தபோது, தமிழர்களால் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. இத்தகைய ஆர்ப்பாட்டங்களால் தனது பயணத்தை இடைநிறுத்தி விட்டு ஜனாதிபதி இலங்கை திரும்பவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.
தற்போது மலேசியாவிலும் இதுபோன்ற நெருக்கடி ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காகவே தனது பயணத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கைவிட்டிருக்கவேண்டும் என்று அரசியல் அவதானிகள் கூறுகின்றனர்.
No comments:
Post a Comment