கிளிநொச்சி, முரசு மோட்டை, சேத்துக்கண்டி முருகன் கோவிலுக்கு முன்பாகவுள்ள இந்துக்குருக்கள் வீடு ஒன்றில் “பிஸ்ரலுடன்’ புகுந்த முகமூடிக் கொள்ளையர்கள் தங்க நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர். இந்தச் சம்பவம் நேற்று முன்தினம் இரவு 09 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இச் சம்பவம் குறித்து தெரியவருவதாவது:
கத்தி, கைத்துப்பாக்கி (பிஸ்ரல்) என்பவற்றுடன் முகத்தை கறுத்தத் துணியால் மறைத்துக் கட்டிய முகமூடிக் கொள்ளையர்கள் குறித்த வீட்டுக்குள் நுழைந்தனர்.
வயது முதிர்ந்த தாய் மற்றும் மகனின் கழுத்தில் கத்தியை வைத்து வீட்டில் இருக்கும் நகை மற்றும் பணத்தை தரும்படி அவர்கள் மிரட்டினர். பயந்துபோய் செய்வதறியாது நின்ற அவர்கள் தம்மிடமிருந்த 20 பவுண் நகை மற்றும் 3 ஆயிரம் ரூபா பணம் என்பவற்றைக் கொள்ளையர்களிடம் கொடுத்துள்ளனர்.
அப்போது, போரின் போது உயிரிழந்த தனது சகோதரனின் மோதிரத்தையாவது தங்களிடம் தந்து விட்டுச் செல்லும்படி குறித்த குருக்கள் கொள்ளையர்களிடம் மன்றாடியிருக்கின்றார். எனினும் கொள்ளையர்கள் இரங்கவில்லை. “நாங்களும் உங்களைப் போலவே போரில் எல்லாவற்றையும் இழந்தவர்கள் தான்” என்று சுத்தத் தமிழில் கூறி அந்த மோதிரத்தையும் விட்டுவைக்காது எடுத்துச் சென்றனர்.
அத்தோடு நிற்காமல் வீட்டில் இருந்தவர்களை ஓர் அறைக்குள் வைத்து பூட்டி திறப்பையும் எடுத்துச் சென்றுவிட்டனர் கொள்ளையர்கள். மேற்படி சம்பவம் தொடர்பாக கிளிநொச்சிப் பொலிஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டனர்.
http://www.saritham.com/?p=48796
No comments:
Post a Comment