Translate

Tuesday 21 February 2012


அமெரிக்காவின் கோரிக்கையை சிறீலங்கா தட்டிக்கழிக்க முடியாது! இராணுவ நீதிமன்றம் நாடகம்!

சர்வதேசத்தின் பிடிக்குள் இருந்து தப்பிப்பிழைப்பதற்கே ஜெனிவாத் தொடர் நெருங்கும் நிலையில் இராணுவ நீதிமன்றம் என்ற போலி நாடகத்தை சிறீலங்கா அரசு அவசர அவசரமாக அரங்கேற்றி வருகின்றது. இவ்வாறு நவசமசமாஜக் கட்சியின் பொதுச் செயலாளர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன தெரிவித்தார்.
படுகொலை கலாசாரத்தை சிறீலங்காவக்கு கற்பித்த அமெரிக்காவே படுகொலைகள் குறித்து விசாரணை நடத்துமாறு கோருவதை சிறீலங்கா அரசு இலகுவில் தட்டிக்கழித்துவிட முடியாது என்றும் அவர் கூறினார்.
சமகால அரசியல் விவகாரங்கள் தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு:
மனித உரிமைகளை அப்பட்டமாக மீறி தான்தோன்றித்தனமாக செயற்பட்ட மஹிந்த தலைமையிலான அரசு, போர்க்குற்ற விசாரணைக்கு ஒருபோதும் இணங்காது.
சிலவேளை சரத் பொன்சேகாவும், அவருக்கு ஆதரவாகச் செயற்பட்டவர்களும் குற்றவாளிகளாக இனங்காணப்படலாம்.
நாட்டில் இன்று ஜனநாயக ரீதியாக ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்கமுடியாத சூழ்நிலையே ஏற்பட்டுள்ளது. வீதியில் இறங்கிப் போராடினால் சுட்டுப் படுகொலை செய்யும் ஜனநாயகமே நாட்டில் உள்ளது.
தமிழ் மக்களைக் கொத்துக்கொத்தாகக் கொன்று குவித்த அரசுக்கு இதெல்லாம் சர்வ சாதாரணமான செயல். புலிகளை அழிக்கின்றோம் எனக் கூறி சுமார் ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் மக்களைப் படுகொலை செய்தது அரசு.
அன்று புலிகளில் ஆரம்பித்த கொலைவெறி, இன்று நாட்டு மக்களைச் சுட்டு வீழ்த்தும் நிலைக்கு வந்துவிட்டது. இவற்றைப்பற்றி நான் பேசுவதால் என்னையும் கடத்திச்சென்று படுகொலை செய்துவிடக்கூடும். ஏனெனில், அராஜகமான ஆட்சி முறையே நாட்டில் உள்ளது.
நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறு நாம் அரசை மீண்டும் மீண்டும் வலியுறுத்துகின்றோம். அதிகாரப்பரவலாக்கல் என்ற விடயம் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனைத்தான் அரசு முதலில் செய்யவேண்டும்.
இதனைவிடுத்து இராணுவ நீதிமன்றம் என்ற போலி நாடகத்தை ஆரம்பித்துள்ளது அரசு.
போர்க்குற்ற விசாரணைக்கு மஹிந்த அரசு இணங்கும் என்ற நம்பிக்கை எமக்கு கடுகளவேனும் இல்லை. இவையெல்லாம் உலகை ஏமாற்றுவதற்கு அரங்கேற்றப்படும் போலி நாடகமாகும்.
ஜெனிவா மாநாட்டை இலக்குவைத்தே அரசு இந்த அவசர மாற்றங்களைத் துரிதமாக முன்னெடுக்கின்றது என்றார்.

No comments:

Post a Comment