Translate

Thursday, 12 April 2012

இலங்கையில் ஆட்கடத்தல்கள் மனித உரிமை மீறல்கள் அரசாங்கத்தின் ஆதரவுடனேயே மேற்கொள்ளப்படுகின்றதென்ற


  இலங்கையில் ஆட்கடத்தல்கள் மனித உரிமை மீறல்கள் அரசாங்கத்தின் ஆதரவுடனேயே மேற்கொள்ளப்படுகின்றதென்ற செய்தி சர்வதேசத்துக்கும் உள்நாட்டிற்கும் எனது கடத்தல் மூலம் அம்பலப்படுத்தப்பட்டுள்ளதாக முன்னிலை சோஷலிசக் கட்சியின் மத்திய குழு உறுப்பினரும் அவுஸ்திரேலியாவிற்கு நாடு கடத்தப்பட்டவருமான பிரேம்குமார் குணரட்ணம் தெரிவித்தார். 


நான் ஒரு தமிழன் எனவே தான் என்னை பயங்கரவாதியா அரசாங்கம் உருவகப்படுத்தியது எனவும் அவர் தெரிவித்தார்.

மாதிவெலவில் உள்ள முன்னிலை சோசலிச கட்சியின் தலைமையகத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஸ்கைப் மூலமான உரையாடலின் போதே அவுஸ்திரேலியாவிலிருந்து பிரேம்குமார் குணரட்ணம் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஸ்கைப் மூலமான உரையாடலில் மேலும் கருத்து தெரிவித்த பிரேம்குமார் குணரட்ணம், கடந்த 07ம் திகதி கிரிபத்கொடையில் வைத்து ஆயுதம் தரித்தவர்கள் வெள்ளை வானில் என்னை கடத்திச் சென்றனர். 48 மணி நேரம் தடுத்து வைத்து விசாரித்தனர். கடத்தப்பட்ட தினத்தன்று கடுமையான முறையில் விசாரணைகளை மேற்கொள்ளப்பட்டது.

துப்பாக்கி முனையில் கொலை அச்சுறுத்தலும் விடுக்கப்பட்டது.

கடத்தி வந்து என்னை தடுத்து வைத்த இடத்தில் சங்கிலிகள் காணப்பட்டது. வதை முகாம் ஒன்று போல் தோன்றியது. ஆனால் எனது கால்கள் கட்டப்படவில்லை. அனைத்தையும் காணக்கூடியதாக இருந்தது. ஆனால் இரண்டாவது நாள் என்னை நன்றாக நடத்தினார்கள்.

விடுதலைப்புலி பயங்கரவாதிகளுடன் தொடர்புள்ளதா? ஆயுத கிளர்ச்சிக்கு தயார் செய்யப்படுகிறதா? கட்சிக்கு எங்கிருந்து பணம் கிடைக்கின்றது? என்றெல்லாம் பல கோணங்களில் விசாரணைகளை நடத்தினார்கள். இதன்போது கடத்தப்பட்ட திமுது ஆட்டிகல சகோதரியின் குரலை கேட்க முடிந்தது. ஆனால் நேரில் காணக் கிடைக்கவில்லை.

நாட்டில் கடத்தல்கள், காணாமல் போதல், மனித உரிமை மீறல்கள் மற்றும் ஜனநாயகம் இல்லாமை தொடர்பாக குரல் கொடுத்து நாட்டையும் மக்களையும் மீட்கவே உண்மையான இடதுசாரி கொள்கையுடனான எமது கட்சியை ஆரம்பித்தோம். இதற்கு பயந்தே அரசாங்கம் படையினரை பயன்படுத்தி என்னை கடத்தியது.

இரண்டாவது நாள் என்னை தெமட்டகொடையிலுள்ள குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு கொண்டு சென்று ஒப்படைத்தனர். பின்னர் அங்கிருந்து விமான நிலையம் கொண்டு வரப்பட்டு அவுஸ்திரேயாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டேன்.

வீசா காலம் முடிவடைந்தும் மேலதிகமாக 6 மாத காலம் இலங்கையில் தங்கியிருந்த குற்றச்சாட்டே பொலிஸ் தரப்பில் முன்வைக்கப்பட்டது. அவுஸ்திரேலிய அரசாங்கம், உயர் ஸ்தானிகராலயம் ஆகியவை அவுஸ்திரேலியப் பிரஜையென்ற ரீதியில் அரசாங்கத்திற்கு கொடுத்த அழுத்தங்கள்.

மனித உரிமை அமைப்புக்கள், அரசியல் தலைவர்கள் இக் கடத்தலை கண்டித்ததன் காரணமாகவே நான் தப்பினேன். இல்லாவிட்டால் நான் உயிரோடு மீண்டிருக்க மாட்டேன். நான் ஒரு தமிழன். உண்மையான பெயர் பிரேம் குமார் குணரட்ணம். ஆனால் வடக்கு, கிழக்கு தெற்கு நாடு முழுவதும் வாழும் சிங்கள, முஸ்லிம் அனைத்து இனத்தினரின் ஜனநாயக உரிமைகளுக்காக குரல் கொடுக்க ஆரம்பித்ததன் காரணமாகவே பயங்கரவாதியாக, ஆயுதக் கிளர்ச்சியாளனாக சித்திரிக்கப்பட்டேன். அரச ஊடகங்களும் சில தனியார் ஊடகங்களும் இதனை மிகைப்படுத்தியது.

நான் சட்ட விரோதமான செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்தால் ஆதாரங்களோடு என்னை சட்டத்தின் முன் நிறுத்தியிருக்கலாம். ஆனால் அரசாங்கமே சட்ட விரோதமாக என்னை கடத்தி நாடு கடத்தியுள்ளது. இதன் மூலம் இலங்கையில் வெள்ளை வான் ஆட் கடத்தல்கள், மனித உரிமை மீறல்கள் இடம்பெறுவதையும் அதற்கு அரசாங்கத்தின் ஆதரவுடன் படையினர் பயன்படுத்தப்பட்டு இச்சட்ட விரோத செயல் நடைபெறுவதையும் சர்வதேசத்திற்கும் உள்நாட்டிற்கும் அம்பலப்படுத்தியுள்ளது.

நியாயமான அரசியலை நடத்த முடியாததன் காரணமாகவே பெயர் மாற்றத்தோடு நடமாட வேண்டிய நிலை உருவானது. நாட்டில் ஆட்சியாளர்களால் அரசாங்கம் அடக்கு முறை, காட்டுச் சட்டம் அமுல்படுத்தப்படுகிறது.

எனவே, இன, மத, மொழி, அரசியல் பேதங்களின்றி அனைவரும் அரசாங்கத்திற்கு எதிராக வீதியில் இறங்கிப் போராட்டங்களை நடத்த வேண்டிய காலம் வந்துவிட்டதையும் பிரேம்குமார் குணரட்ணம் தெரிவித்தார். ___

No comments:

Post a Comment