Translate

Friday 13 April 2012

பேச்சு உடன் ஆரம்பிக்கும் அறிகுறி எதுவுமே இல்லை அதற்கான புறச்சூழலை அரசுதான் உருவாக்க வேண்டும்

பேச்சு உடனடியாக ஆரம்பிக்கும் அறிகுறி எதுவும் இல்லை. அரசுதான் பேச்சுக்கான முன் முயற்சிகளை எடுக்க வேண்டும். அவ்வாறான முயற்சிகள் எதனையும் அரசு இதுவரை மேற்கொள்ளவில்லை.


பேச்சு இடைநிறுத்தப்பட்டு நான்கு மாதங்கள் கடந்துவிட்டன. மீண்டும் பேச்சை ஆரம்பிப்பதற்கான செய்திகள் எவையும் அரசிடம் இருந்து எமக்குக் கிடைக்கவில்லை எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

இந்த நிலையில் பேச்சு ஆரம்பமாகும் சாத்தியம் உள்ளதாக அரச தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ரஜீவ விஜேயசிங்க தெரிவித்திருக்கும் கருத்து அடிப்படையற்றது எனவும் அவர் மறுத்திருக்கிறார்.

அரசு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இடையிலான பேச்சுக்கள் குறித்துக் கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

நாடாளுமன்றத் தெரிவுக்குழு விவகாரத்தில் எழுந்த முரண்பாடுகள் காரணமாக இடைநிறுத்தப்பட்ட பேச்சுக்கள் மீண்டும் ஆரம்பிக்கும் சாத்தியம் உள்ளதாகவும் அது தொடர்பில் கூட்டமைப்பின் தலைமைப் பீடத்திடமிருந்து சாதகமான சமிக்ஞை கிடைத்துள்ளதாகவும் அரச தரப்புப் பேச்சுக்குழுவின் பிரதிநிதி நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவ விஜேயசிங்க கூறியிருந்தார்.

இந்தக் கருத்தை சம்பந்தன் அடியோடு மறுத்தார்.

அரசுடனான பேச்சுக்களில் இருந்து கூட்டமைப்பு விலகிக் கொள்ளவில்லை. அரசுதான் தம்பாட்டில் பேச்சை இடைநிறுத்தியது. எனவே அவர்கள் தான் அதனை மீள ஆரம்பிப்பது தொடர்பிலும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். எமது மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான பேச்சுக்களுக்கு நாம் எப்போதும் தயாராகவே உள்ளோம் என்றும் குறிப்பிட்டார் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:

பேச்சுக்களை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பில் அரசு அதிக அக்கறை செலுத்தவில்லை. பேச்சு தடைப்பட்ட இடத்தைத் திருத்தியமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. மொத்தத்தில் பேச்சை ஆரம்பிப்பதற்கான புறச் சூழலை அரசு உருவாக்கவில்லை.

இவ்வாறானதொரு நிலையில் பேச்சை மீண்டும் ஆரம்பிக்கத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நல்லதொரு சமிக்ஞையை வெளியிட்டுள்ளதாக அரசதரப்புப் பேச்சுக் குழு உறுப்பினர்கள் கற்பனையில் கூறுகின்றனர். தன் பக்கம் பிழையை வைத்துக் கொண்டு அரசு பொய்ப் பிரசாரம் செய்கிறது என்றார்.

No comments:

Post a Comment