Translate

Tuesday, 1 May 2012

இராஜதந்திர நெறிமுறைகளை மீறிய ஜனாதிபதி மகிந்த


ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஏற்றுக் கொள்ளப்பட்ட இராஜதந்திர நெறிமுறைகளைப் பின்பற்றத் தவறுவதால், வெளிவிவகார அமைச்சு அதிகாரிகளும், துறைசார்ந்த அமைச்சர்களும் பாரிய நெருக்கடிகளைச் சந்திப்பதாக இலங்கை வெளிவிவகார அமைச்சின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அண்மையில் இந்திய நாடாளுமன்றக் குழுவின் இலங்கை பயணத்தின் போது, இராஜதந்திர நெறிமுறைகள் மீறப்பட்ட பல சம்பவங்கள் இடம்பெற்றதாகவும் அந்த அதிகாரி கூறியுள்ளார்.

இந்தியாவின் எதிர்க்கட்சித் தலைவர் சுஸ்மா சுவராஜ் தலைமையில் இலங்கைக்குப் பயணம் மேற்கொண்ட இந்திய நாடாளுமன்றக் குழு, இரண்டாம் நிலைக் குழுவே என்றும், ஆனால் அதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதாகவும் அந்த அதிகாரி சுட்டிக்காட்டியுள்ளார்.
இரண்டாம் நிலைக்குழுவான இந்தியக் குழுவுக்கு, அதிக முக்கியத்துவம் கொடுத்து ஜனாதிபதி மகிந்த இரண்டுமுறை அவர்களைச் சந்தித்திருந்தார். முதலில் சுஸ்மா சுவராஜை தனியாகவும், மறுநாள் இந்திய நாடாளுமன்றக் குழுவுடனும் அவர் சந்திப்பை மேற்கொண்டிருந்தார்.
இது வெளிவிவகார அமைச்சரை நெருக்கடிக்குள் தள்ளியது. அத்துடன் இலங்கையின் பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்சவும் இந்த இராஜதந்திர நெறிமுறையை பலமுறை மீறியுள்ளார்.
அவர் கொழும்பிலும், இந்தியக்குழுவினர் பயணம் செய்த, முல்லைத்தீவு, ஹற்றன், மட்டக்களப்பு என்று ஏனைய பல இடங்களிலும் அவர்களைச் சந்தித்துள்ளார். இது இராஜதந்திர நெறிமுறைகளுக்கு முரணானது என்றும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment