Translate

Tuesday, 1 May 2012

பள்ளிவாசல் மீதான தாக்குதலுக்கு எதிர்ப்பு இலங்கைத் தூதரகம் முற்றுகை மனித நேய மக்கள் கட்சியுடன் வைகோவும் இணைவு


சென்னை ;  தம்புள்ளயில் முஸ்லிம்களின் பள்ளிவசால் மீது தாக்குதல் நடத்தியதைக் கண்டித்து  மனிதநேய மக்கள் கட்சி  நடத்தும் இலங்கை தூதரகத்தை முற்றுகையிடும்  போராட்டத்தில் ம. தி. மு. க. வும் கலந்துகொள்ளும் என்று வைகோ அறிவித்துள்ளார்.
ம. தி. மு. க. பொதுச் செயலாளர்  வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது ;

இலங்கைத் தமிழர்களின் வழிபாட்டுத் தளங்களை பௌத்த இனவாத அரசு தாக்குவதும் நாசப்படுத்துவதும் பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. பிரித்தாளும் சூழ்ச்சியைக் கையாண்டு  தொடக்கத்தில் இந்துக்களின் கோவில்களையும்  பின்னர் கிறிஸ்தவ தேவாலயங்களையும்  நாசப்படுத்துகின்ற வேலைகளை ஊக்குவித்து வந்த   அரசு இப்பொழுது முஸ்லிம்கள் தொழுகை நடத்தும் பள்ளிவாசலையும் தாக்க ஆரம்பித்துள்ளது.
ஏப்ரல் 20 ஆம் திகதி கொழும்பில் இருந்து 150 கிலோ மீற்றர் தொலைவில்  உள்ள மத்திய மாகாணத்தின் மாத்தளை  மாவட்டத்தில்  தம்புள்ள என்ற இடத்தில் உள்ள பள்ளிவாசலை புத்த பிக்குகள் கூச்சலுடன் முற்றுகை இட்டு கடப்பாரை, சம்மட்டிகள் கெண்டு உடைத்து படுநாசம் செய்து உள்ளனர்.
தமிழ் இன அழிப்பைக் குறிக்கோளாகக் கொண்டு அராஜகம் செய்து வருகின்ற சிங்கள இனவாதக் கட்சிகளும் இனவாத அரசும் இலங்கைத் தீவு முழுமையையும்  பௌத்த மயமாக்கல் சிங்கள இன ஆதிக்கத்தை நிறுவுதல்  என்ற நோக்கத்துடன்  நடத்திவருகின்ற கொடுஞ் செயல்களுக்குக் கண்டனத்தையும்  எதிர்ப்பையும் தெரிவிக்க இன்று (திங்கட்கிழமை)  மாலை 4 மணி அளவில் சென்னையில் உள்ள இலங்கைத் துணைத் தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை மனிதநேய மக்கள் கட்சி நடத்தவுள்ளது.
இப்போராட்டத்தில்  மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் பங்குபற்றுகிறது, மாலை 3 மணிக்கு மயிலாப்பூர் நாகேஸ்வரராப் பூங்கா அருகில் இருந்து புறப்பட்டுச் செல்லும்  அறப்போராட்டக்குழுவில் ம. தி. மு. க.  துணைப் பொதுச்செயலாளர்  மல்லை சத்யா, தென்,  சென்னை மாவட்டச் செயலாளர் வேளச்சேரி மணிமாறன் வடசென்னை மாவட்டச் செயலாளர்  ஜீவன், ம. தி.   மு. க. அமைப்புச் செயலாளர் சீமா பசீர் உள்ளிட்ட ம. தி. மு.க.  வினர் பங்கேற்பார்கள்.

No comments:

Post a Comment