Translate

Saturday, 23 June 2012

அரசியல் தீர்வு காண இன்னும் ஏன் தாமதம்?; மஹிந்தவிடம் துருவினார் மன்மோகன் சிங்


அரசியல் தீர்வு காண இன்னும் ஏன் தாமதம்?; மஹிந்தவிடம் துருவினார் மன்மோகன் சிங்
news
 இலங்கையில் தமிழர்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வொன்றை வழங்குவதில் இன்னும் தாமதம் காட்டப்படுவது ஏன்? என இந்தியப் பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கேள்வி எழுப்பினார். 
 
தீர்வுக்கான முயற்சிகளைத் துரிதப்படுத்தி விரைவில் நிரந்தரத் தீர்வொன்றை எட்டுவதற்கான நடவடிக்கைகளை உடன் மேற்கொள்ளுமாறும் அவர் ஜனாதிபதி மஹிந்தவுக்கு ஆலோசனை வழங்கினார்.
 
பிரேஸில் ரியோடி ஜெனிரோவில் உள்ள வின்ட்ஸர் ஹோட்டலில் ஜனாதிபதி மஹிந்தவுக்கும், பிரதமர் மன்மோகனுக்குமிடையிலான சந்திப்பு நடைபெற்றது. சுமார் அரை மணிநேரம் இரு தலைவர்களும் தனியே பேச்சு நடத்தினர். பின்னர் உத்தியோகபூர்வப் பேச்சு நடந்தது.
 
நிரந்தர அரசியல் தீர்வு தொடர்பில் இலங்கை அரசு எடுத்திருக்கும் நடவடிக்கைகள் தொடர்பில் இந்தியப் பிரதமர் விரிவாகக் கேட்டறிந்ததுடன் அதனைத் துரிதப்படுத்தி தமிழர் பிரச்சினையைத் தீர்த்துவைக்க எடுக்கப்படும் முயற்சிகளை இந்தியா உத்வேகத்துடன் வரவேற்குமென்றும் குறிப்பிட்டுள்ளார்.
 
இனப்பிரச்சினைக்கான தீர்வை துரிதமாக எட்டுவதன் மூலம் இலங்கை சர்வதேச ரீதியில் எதிர்கொண்டுவரும் அழுத்தங்களிலிருந்து விடுபட்டுக்கொள்ள முடியும் எனவும் மன்மோகன் சிங் மஹிந்தவிடம் கூறியுள்ளார். நிலையான நிரந்தரமான தீர்வை எட்டும் விடயத்தில் இலங்கைக்கு இந்தியா எந்த நேரத்திலும் உதவிகள் வழங்க தயாராக இருக்கிறது எனவும் இந்தச் சந்திப்பில் மன்மோகன் சிங் குறிப்பிட்டுள்ளார்.
 
இலங்கையில் மேற்கொள்ளப்படும் மீள்குடியேற்ற நிலைமை குறித்து மன்மோகனுக்கு விளக்கிய ஜனாதிபதி ராஜபக்ஷ, அகதி முகாம்களில் இருந்தவர்களுள் சுமார் மூன்று லட்சம் பேர் வரையானோருக்குப் புனர்வாழ்வு வழங்கப்பட்டுள்ளது எனச் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
வடக்கில் இந்திய அரசின் உதவியுடன் நிர்மாணிக்கப்படவுள்ள வீடமைப்புத் திட்டங்கள் குறித்தும் இந்தச் சந்திப்பின் போது பேசப்பட்டுள்ளது. இதற்கான நடவடிக்கைகள் அடுத்த மாதத்திற்குள் ஆரம்பமாகிவிடுமென இந்தியப் பிரதமர், ஜனாதிபதி மஹிந்தவிடம் இதன் போது உறுதியளித்தாரெனத் தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment